இது என்ன புதுக்கதையா இருக்கு! 'கல்யாணம் ஆகாவிட்டால் அனுமதி இல்லை'- பூங்காவில் வைத்த பேனரால் பரபரப்பு
- காதல் ஜோடிகள் அத்துமீறும் சம்பவம் தொடர்ந்து வருகிறது.
- தமிழக அரசின் முத்திரை, காவல்துறையின் முத்திரை, காவல் உதவி எண் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டிருந்தது.
காதல்... இரு மனங்கள் ஒன்றிணைவது காதல்.
புனிதமாக பார்க்கப்பட்ட காதல் இக்காலக்கட்டத்தில் பொது இடங்களில் முகம் சுளிக்கும் வகையில் எல்லைமீறும் செயல்களில் களமிறங்குகிறார்கள், இன்றைய பல காதல் ஜோடிகள்.
இதற்காக கடற்கரை, பூங்கா உள்ளிட்ட பொது இடங்களில் கண்காணிப்பு கேமரா போன்ற பல்வேறு தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டாலும் பலனில்லை.
அந்தவகையில் ஓசூரில் பூங்கா முன்பு விளம்பர பதாகை (பேனர்) ஒன்று வைக்கப்பட்டதில் பெரும் சர்ச்சையை கிளம்பியது. அதன் விவரம் வருமாறு:-
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் ராமநாயக்கன் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கரையில் மாநகராட்சி சார்பில் குழந்தைகள் பூங்கா அமைந்துள்ளது.
இந்த பூங்காவில் நடைப்பயிற்சி பாதை, உடற்பயிற்சி மேற்கொள்வதற்கான கருவிகள், தியான மண்டபம், மரப்பூங்கா, சிறுவர்கள் விளையாடுவதற்கான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் ஏரிக்கரையையொட்டி உட்காருவதற்கு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஓசூர் பகுதியில் உள்ள பொதுமக்கள் விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் வந்து, பூங்காவில் பொழுது போக்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் பூங்காவில் பகல் நேரத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் வந்து செல்வதும் மற்றும் பிறந்தநாள் கொண்டாடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
இது ஒருபுறம் இருந்தாலும், இங்கு காதல் ஜோடிகள் அத்துமீறும் சம்பவம் தொடர்ந்து வருகிறது. இந்த பூங்காவில் இரவு நேர காவலாளி இல்லாததால் சமூக விரோத செயல்களும் நடந்து வந்தன. இதனால் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் காலை மற்றும் மாலையில் மட்டும் பொதுமக்கள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். தொடர்ந்து பூங்காவை பகலில் திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனிடையே பூங்காவின் நுழைவு வாயிலில் திருமணம் ஆகாதவர்களுக்கு பூங்காவிற்குள் அனுமதி இல்லை என நேற்று பேனர் வைக்கப்பட்டது. அதில் தமிழக அரசின் முத்திரை, காவல்துறையின் முத்திரை, காவல் உதவி எண் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பாக திருமணம் ஆகாத இளைஞர்களும், இளம்பெண்களும் பேனரை பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். இதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு தங்களின் எதிர்ப்பை அவர்கள் பதிவு செய்தனர்.
இதனிடையே இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளானதால் அந்த பேனர் அகற்றப்பட்டது. இந்த பேனரை காவல்துறை சார்பில் வைக்கவில்லை என போலீசார் தெரிவித்த நிலையில், பேனரை கட்டி சர்ச்சையை ஏற்படுத்தியது யார்? என விசாரணை நடந்து வருகிறது.