தமிழ்நாடு செய்திகள்

பண்ணாரி அம்மன் கோவில் அருகே 3 மணி நேரம் நின்ற ஒற்றை யானையால் பரபரப்பு

Published On 2025-06-03 11:02 IST   |   Update On 2025-06-03 11:02:00 IST
  • ஒரே இடத்தில் எங்கும் அசையாமலும், நகராமலும் அந்த ஒற்றை யானை நின்று கொண்டே இருந்தது.
  • யானை வழக்கத்துக்கு மாறாக மிகவும் சோர்வுடன் காணப்பட்டது.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. பண்ணாரி அம்மன் கோவிலை ஒட்டிய சோதனை சாவடி அருகே சத்தி- மைசூர் தேசிய நெடுஞ் சாலை ஆரம்பமாகிறது.

அடர்ந்த வனப்பகுதியில் இந்த நெடுஞ்சாலை இருப்பதால் இங்கு அடிக்கடி வனவிலங்குகள் நடமாடுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பண்ணாரி அம்மன் கோவில் அருகே ஒற்றை யானை ஒன்று வனப்பகுதியை விட்டு வெளியேறி வந்து சத்தி - மைசூர் தேசிய நெடுஞ்சாலையோரம் சுற்றி வருகிறது.

ஒற்றை யானை நடமாட்டத்தால் பக்தர்கள் ஒரு வித அச்சத்துடன் அந்த பகுதியை கடந்து சென்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை யானை ஒன்று பண்ணாரி அம்மன் கோவில் அருகே வந்து நின்றது. கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஒரே இடத்தில் எங்கும் அசையாமலும், நகராமலும் அந்த ஒற்றை யானை நின்று கொண்டே இருந்தது.

யானை வழக்கத்துக்கு மாறாக மிகவும் சோர்வுடன் காணப்பட்டது. இதனால் அந்த ஒற்றை யானை உடல் நலம் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என கருதி வனத்துறையினர் அந்த யானையின் நடவடிக்கையை கண்காணித்து வருகின்றனர். இரவு நேரம் முழுவதும் அந்த இடத்தில் இருந்த ஒற்றை யானை காலை ஆனதும் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. அந்த யானைக்கு சிகிச்சை அளிப்பது குறித்து வனத்துறையினர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News