நீலகிரி பூண்டு விலை வீழ்ச்சி - விவசாயிகள் வேதனை
- மத்தியபிரதேசம், குஜராத், இமாச்சலபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பூண்டின் வரத்து அதிகரித்து உள்ளது.
- கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை நீலகிரி மலைப் பூண்டு ஒரு கிலோ ரூ.400 முதல் ரூ.600 வரை விற்பனையாகி வந்தது.
ஊட்டி:
மத்தியபிரதேசம், குஜராத், இமாச்சலபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பூண்டின் வரத்து அதிகரித்து உள்ளது. அதே நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் பனியின் தாக்கம் அதிகரிப்பால் விவசாயிகள் முன்கூட்டியே அறுவடை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக சந்தைகளுக்கு அதிக அளவில் பூண்டு கொண்டு வரப்படுவதால், நீலகிரி பூண்டின் விலையில் தற்போது வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை நீலகிரி மலைப் பூண்டு ஒரு கிலோ ரூ.400 முதல் ரூ.600 வரை விற்பனையாகி வந்தது. ஆனால் தற்போது கிலோ ரூ.65 முதல் ரூ.110 வரை மட்டுமே விற்பனையாகி வருகிறது.
இதன்காரணமாக உற்பத்தி செலவுக்கு ஏற்ற விலை கிடைக்காததால் நீலகிரி விவசாயிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். மேலும் நீலகிரி பூண்டுக்கு போதிய கொள்முதல் விலை நிர்ணயிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.