கம்யூனிஸ்டு கட்சிகளை இ.பி.எஸ். அழைப்பது நகைச்சுவையாக உள்ளது - முத்தரசன்
- சிதம்பரம் சென்றபோது நடராஜரிடம் ஞானஸ்தானம் பெற்றாரா என தெரியவில்லை.
- பா.ஜ.க. அணி ரத்ன கம்பளம் அல்ல ரத்தக்கறை படிந்த கம்பளம்.
சென்னை:
சென்னையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம். தமிழகத்தை மீட்போம்' என்ற முழக்கத்தை முன் வைத்து கோவையில் பிரசாரத்தை தொடங்கினார்.
தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கமே இந்திய கம்யூனிஸ்டு கட்சி சென்ற சட்டமன்றத் தேர்தலில் சொன்னது. அந்த தேர்தலில் அ.தி.மு.க. பி.ஜே.பி.யோடு இருந்த காரணத்தினால் தமிழகம் ஒட்டுமொத்தமாக பி.ஜே.பி.யால் வளைக்கப்படுகிறது. கபளீகரம் செய்யப்படுகிறது.
ஆகவே தமிழகத்தை மீட்க வேண்டும் என்கிற அரசியல் முழக்கத்தை நாங்கள் வைத்தோம். அந்த முழக்கத்தை இரவலாக பெற்று இப்போது எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார். அவர் கோவையில் பேசுகிறபோது, கம்யூனிஸ்டுகளே இல்லை. அவர்களது முகவரியே இல்லை. காணாமல் போய் விட்டார்கள் என்று மேட்டுப்பாளையம் கூட்டத்தில் பேசினார்.
ஒரு வாரம் இடைவெளியில் என்ன ஞானஸ்தானம் பெற்றார் என தெரியவில்லை. சிதம்பரம் சென்றபோது நடராஜரிடம் ஞானஸ்தானம் பெற்றாரா என தெரியவில்லை.
கம்யூனிஸ்டுகள், வி.சி.க. போன்ற கட்சிகள் எங்கள் அணிக்கு வர வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். கோவையில் கம்யூனிஸ்டு கட்சிகள் இல்லை என்று கூறிவிட்டு சிதம்பரத்தில் கம்யூனிஸ்டு கட்சி எங்கள் அணிக்கு வர வேண்டும் என்று பேசுவது நல்ல நகைச்சுவையாகும்.
எங்கள் அணிக்கு வந்தால் ரத்ன கம்பளம் விரித்து வரவேற்போம் என்றும் சொல்லி இருக்கிறார். அவர் ஏற்கனவே சேர்ந்திருக்கிற பா.ஜ.க. அணி ரத்ன கம்பளம் அல்ல ரத்தக்கறை படிந்த கம்பளம்.
அந்த ரத்தக்கறை படிந்த கம்பளத்தில் எடப்பாடி பயணம் பண்ணுகிறார். அதன் ஆபத்தை உணராமல் அல்லது ஆபத்தை உணர்ந்தும் தனக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியின் காரணமாக அவர் பயணம் பண்ணுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.