தமிழ்நாடு செய்திகள்

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 133 அடியாக உயர்வு - வைகை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

Published On 2025-07-26 10:58 IST   |   Update On 2025-07-26 10:58:00 IST
  • தேனி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
  • தொடர் மழையால் சுருளி, மேகமலை அருவிகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து காணப்படுகிறது.

கூடலூர்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்து வருவதால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

கடந்த 2 நாட்களாக தேனி, தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி தேனி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேக்கடியில் பெய்து வரும் தொடர் மழையால் நேற்று அணைக்கு நீர்வரத்து 4574 கன அடியாக இருந்தது. நீர்மட்டம் 131.90 அடியாக உயர்ந்தது. இன்று காலை அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து 4711 கன அடியாக அதிகரித்துள்ளது.

நீர் திறப்பு 1867 கன அடியாக உள்ளது. நீர்மட்டம் மேலும் உயர்ந்து 132.95 அடியாக உள்ளது. ரூல்கர்வ் விதிப்பதி இம்மாதம் 30-ந் தேதி வரை 137 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என்பதால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரியாறு அணையில் 28, தேக்கடியில் 21 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

ஆண்டிபட்டி அருகில் உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்ட விவசாயம், குடிநீர் தேவைகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு காரணமாகவும், வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாகவும் நீர்மட்டம் இன்று காலை 65.85 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1794 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக 869 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4818 மி.கன அடியாக உள்ளது. தொடர்ந்து அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியதும், வைகை அணை கரையோரம் உள்ள 5 மாவட்டங்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாயம் எச்சரிக்கை விடப்படும். 68 அடியை எட்டியதும் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 69 அடியை எட்டியதும் 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும்.

தொடர் மழையால் சுருளி, மேகமலை அருவிகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பாதுகாப்பு கருதி அங்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

Tags:    

Similar News