தமிழ்நாடு செய்திகள்

ஆண்டிபட்டி அருகில் உள்ள மேகமலை அருவியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை காணலாம்.

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர்வு - அருவிகளில் வெள்ளப்பெருக்கு

Published On 2025-10-16 10:38 IST   |   Update On 2025-10-16 10:38:00 IST
  • கனமழை காரணமாக பெரியகுளம் அடுத்துள்ள கும்பக்கரை அருவியில் இன்று 6வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • தொடர்மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கூடலூர்:

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. வடகிழக்கு பருவமழை இன்று தொடங்க உள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 131.60 அடியாக உள்ளது. நீர்வரத்து 2375 கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில் அணையில் இருந்து 1000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5071 மி.கனஅடியாக உள்ளது.

71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 62.01 அடியாக உள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து 1307 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக 1199 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 3995 மி.கனஅடியாக உள்ளது.

126.26 அடி உயரம் உள்ள சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 102.17 அடியாக உள்ளது. ஒரே நாளில் 16 அடிவரை நீர்மட்டம் உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. நீர்வரத்து 80 கனஅடியாகவும். நீர் திறப்பு 3 கனஅடியாகவும் உள்ளது. நீர் இருப்பு 63.55 கனஅடி.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 38.40 அடி, வரத்து 14 கனஅடி, இருப்பு 165.30 மி.கனஅடி.

கனமழை காரணமாக பெரியகுளம் அடுத்துள்ள கும்பக்கரை அருவியில் இன்று 6வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுருளி அருவியிலும் தடை தொடர்கிறது. இதேபோல் மேகமலை அருவியிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுவதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தீபாவளி சமயத்தில் பெய்து வரும் மழையால் வியாபாரிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பல இடங்களில் சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் விபத்துகள் நடந்து வரும் நிலையில் தீபாவளிக்கு பொருட்கள் வாங்கச் செல்லும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பெரியகுளம் 12, வீரபாண்டி 6.4, சோத்துப்பாறை 9.4, போடி 14.2, உத்தமபாளையம் 2.6, கூடலூர் 2.2, பெரியாறு அணை 8, தேக்கடி 6.4, சண்முகாநதி 3.4 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News