137 அடியை எட்டிய முல்லை பெரியாறு அணை நீர்மட்டம்- அருவிகளில் குளிக்க தடை
- மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 45 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை.
- சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 43.30 அடியாக உள்ளது.
கூடலூர்:
வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் தேனி மாவட்டத்தில் உள்ள அணைகள், குளங்கள், கண்மாய்கள் உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து 2333 கனஅடியாக அதிகரித்துள்ளது.
உப்பார்பட்டி பகுதியில் முல்லை பெரியாற்று கரையோரங்களில் சீரமைப்பு பணி நடைபெற்று வருவதால் அணையில் இருந்து கடந்த 4 நாட்களாக தண்ணீர் திறப்பு முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து இன்று காலை 137 அடியை எட்டியது. அணையில் 6370 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
அக்டோபர் மாதத்தில் 138 அடிவரைதான் தண்ணீர் தேக்க முடியும் என்பதால் கேரள பகுதிக்கு வீணாக உபரிநீர் திறக்கப்பட்டது. ஆனால் நவம்பர் மாதத்தில் 142 அடிவரை தண்ணீர் தேக்கலாம் என்பதால் தொடர்ந்து அணையின் நீர்மட்டத்தை உயர்த்தி வருகின்றனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 61.19 அடியாக உள்ளது. அணைக்கு 100 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 2099 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 3834 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 45 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 126.28 அடியில் நீடித்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் 100 கனஅடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.
சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 43.30 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 14.47 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
ஆண்டிபட்டி அருகே வருசநாடு வனப்பகுதியில் அமைந்துள்ள மேகமலை அருவியில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது படிக்கட்டுகள், தடுப்புகள் சேதமடைந்தது. மேலும் அருவிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.
இதேபோல் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியிலும் இன்று காலை கூடுதல் தண்ணீர் வந்ததால் குளிக்க தடை விதிக்கப்பட்டது. வனத்துறையினர் அருவி உள்ளிட்ட நீர்நிலைகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். பொதுமக்களும் மழை காலங்களில் நீர்நிலைகளுக்கு செல்வததை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.
ஆண்டிபட்டி 2.8, அரண்மனைபுதூர் 2.2, வீரபாண்டி 3.2, பெரியகுளம் 9.6, மஞ்சளாறு 8, சோத்துப்பாறை 10.6, வைகை அணை 2, போடி 5.8, உத்தமபாளையம் 8.6, கூடலூர் 6.8, பெரியாறு அணை 17, தேக்கடி 26, சண்முகாநதி 7.4 என மொத்தம் 110.4 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.