தமிழ்நாடு செய்திகள்

கொல்லிமலையில் சுற்றுலா பயணிகளை கடித்து குதறிய தெரு நாய்கள்

Published On 2025-05-06 11:09 IST   |   Update On 2025-05-06 11:09:00 IST
  • படுகாயம் அடைந்தவர்கள் செம்மேடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • பொதுமக்களை கடித்து குதறிய நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

கொல்லிமலை:

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை புகழ் பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். கோடை விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் இங்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் கொல்லிமலை அரியூர்நாடு ஊராட்சிக்கு உட்பட்ட பஞ்சாட்டுபட்டி, நம் அருவி, சோளக்காடு, டெம்பிள்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் மற்றும் நம் அருவிக்கு குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டவர்களை திடீரென தெரு நாய்கள் துரத்தி, துரத்தி கடித்து குதறியது. இதில் படுகாயம் அடைந்தவர்கள் செம்மேடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொதுமக்களை கடித்து குதறிய நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஊராட்சி துறை ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று 13 வெறிநாய்களை பிடித்து ஒரு அரங்கத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், பொதுமக்களை கடித்து குதறிய தெருநாய்கள் பிடிக்கப்பட்டு ஒரு இடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்பு துறை டாக்டர்கள் மூலம் அவைகளுக்கு இனவிருத்தி கட்டுப்பாடு செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்படும் என்றனர்.

Tags:    

Similar News