தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க. போல வெற்றி பெற சிலர் பகல் கனவு காண்கிறார்கள்- மு.க.ஸ்டாலின்

Published On 2025-11-08 14:35 IST   |   Update On 2025-11-08 14:52:00 IST
  • 18 ஆண்டுகள் உயிரை கொடுத்து ஒவ்வொருவரும் உழைத்தனர்.
  • ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரு தி.மு.க.தான்.

சென்னை:

முற்போக்கு புத்தக காட்சி மற்றும் தி.மு.க. "இரு வண்ணக் கொடிக்கு வயது 75" என்ற பெயரில் தி.மு.க. இளைஞரணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று விழா நடந்தது.

இந்த விழாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலாளர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

துணை முதலமைச்சரும் தி.மு.க. இளைஞரணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இந்த விழாவை ஒருங்கிணைத்து இருந்தார்.

விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முற்போக்கு புத்தக காட்சியை தொடங்கி வைத்தார். காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு என்ற நூலை வெளியிட்டார். அதனை அமைச்சர் துரைமுருகன் பெற்றுக் கொண்டார். பின்னர் 2 நாள் கருத்தரங்கையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

முன்னதாக தி.மு.க. 75 அறிவு திருவிழா வரலாற்று கண்காட்சியை பார்வையிட்டு திராவிட இயக்கத் தலைவர்கள் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தன்மானம் காக்கும் கழகம் மேடை நாடகம் நடைபெற்றது.

விழாவில் பங்கேற்ற கூட்டணிக் கட்சி தலைவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.

பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

திருவள்ளுவர் கோட்டமே திராவிட கோட்டமாக மாறி இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். காலத்தின் நிறம் 'கருப்பு சிவப்பு' என்னும் அறிவு கருவூலத்தை தமிழ் சமூகத்திற்கு அளிக்கின்ற நூல் வெளியீட்டு விழா, தமிழ் நாட்டின் லட்சிய கொடியாய் விளங்குகிற நம்முடைய கருப்பு சிவப்பு இரு வண்ணக் கொடிக்கு வயது 75 என்பதை முன்னிட்டு வரலாற்று கண்காட்சி, இருநாள் கருத்தரங்கம், முற்போக்கு புத்தக கண்காட்சி என்று இந்த கொள்கை திருவிழாவில் இளைஞர் அணி முன்னெடுத்திருக்கிறது.

இந்த கொள்கை திரு விழாவுக்கு வித்திட்டு திக்கெட்டும் திராவிடம் எதிரொலிக்க இளைஞர் அணி செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி கடுமையாக களப்பணியாற்றி வருகிறார்.

தி.மு.க.வின் 75-ம் ஆண்டு பயணத்தை நினைவு கூரக்கூடிய இந்த விழாவுக்கு அறிவு திருவிழா என்று தொடங்கி பெயர் வைத்திருக்கிறார். இதைவிட பொருத்தமான தலைப்பு வேறு இருக்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டும்.

கழகத்தை தொடங்கியவர் அறிஞர் அண்ணா. அதை 50 ஆண்டுகள் கட்டிக் காத்தவர் கலைஞர். கழகத்தின் முதல் தலைமையகம் அறிவகம். கலைஞர் கட்டிய தற்போதைய தலைமையகத்தின் பெயர் அறிவாலயம். இப்படி அறிவை மையப்படுத்தி அறிவொளியை பரப்புவதையே தலையாய கடமையாக நினைத்து இயங்கி வரக்கூடிய கட்சியின் 75-ம் ஆண்டு கொண்டாட்டத்தை அறிவுத் திருவிழா என்று சொல்லாமல் வேறு என்ன சொல்லி அழைக்க முடியும்.

உலக பொதுமறை வழங்கிய வள்ளுவருக்கான இந்த கோட்டத்தில் கலைஞர் விரும்பிய அறிவுத் திருவிழாவை ஏற்பாடு செய்து உள்ள இளைஞர் அணி செயலாளர் கொள்கை இளவல் உதயநிதியையும், அவருக்கு துணை நிற்கக்கூடிய இளைஞர் அணியின் தம்பிமார்களையும் மனதார பாராட்டுகிறேன். தலைமை கழகத்தின் சார்பில் அவர்களை மனதார வாழ்த்துகிறேன்.

நான் நினைத்ததை விட சிறப்பாக இதை ஏற்பாடு செய்திருக்கிறீர்கள். அய்யன் வள்ளுவர் சொன்னது போல் 'மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல்' என்ற குறளுக்கேற்ப உதயநிதி செயல்படுகிறார் என்று பெருமையோடு சொல்கிறேன். அந்த பெருமையோடு அவருக்கு ஒரு வேண்டுகோளும் வைக்க விரும்புகிறேன். என் அன்பு கட்டளை என்று கூட சொல்லலாம். இந்த அறிவுத் திருவிழாவை இத்தோடு நிறுத்தாமல் தொடர்ந்து ஆண்டுதோறும் நடத்த வேண்டும்.

முழுக்க முழுக்க சாமானியர்களால் தொடங்கப்பட்டு 1967-ல் முதல் மாநில கட்சியாக ஆட்சியை பிடித்து சாதனை படைத்த கழக வரலாற்றை இன்று வரை மீண்டும் மீண்டும் பல்வேறு கோணங்களில் பல ஆய்வாளர்கள் ஆர்வத்தோடு ஆராய்ச்சி செய்து கொண்டே இருக்கிறார்கள்.

ஏதோ கட்சியை தொடங்கினோம். அடுத்த முதலமைச்சர் நான் தான் என அறிவித்தோம் என்று நாம் ஆட்சிக்கு வரவில்லை. கழகத்தின் தலைவர்களில் இருந்து கடைகோடி தொண்டர்கள் வரை சுற்றி சுழன்று பணியாற்றினார்கள்.

18 ஆண்டுகள் உயிரை கொடுத்து ஒவ்வொருவரும் உழைத்தனர். எத்தனை பத்திரிகைகள், எத்தனை புத்தகங்கள், எத்தனை கூட்டங்கள், எத்தனை கொள்கை வகுப்பெடுப்புகள், நாடகங்கள், திரைப்படங்கள், எத்தனை போராட்டங்கள், எத்தனை சிறைவாசங்கள், எத்தனை தியாகங்கள், எத்தனை துரோகங்கள். அன்று தி.மு.க. உழைத்த உழைப்பு. சாதாரண உழைப்பு அல்ல. சமூகத்தில் சரிபாதி மக்கள் படிப்பறிவு கூட இல்லாமல் இருந்த காலகட்டத்தில் குக்கிராமத்தில் இருக்கக்கூடிய முடிதிருத்தக்கூடிய சலூன்கூட மக்களின் சிந்தனைகளை திருத்துகிற மையமாக செயல்பட்டது.

சைக்கிள் கடை, டீக்கடை என ஒரு இடம் விடாமல் திராவிட இயக்க இதழ்களை ஒரு தி.மு.க.காரர் வாசித்து அவரை சுற்றி 10 பேர் செவி வழியாக கேட்டு உலக வரலாற்றை தெரிந்து கொண்டனர்.

கிராமத்தில் இருப்பவர்களும் கியூபா புரட்சியை தெரிந்து வைத்திருந்தனர். ரஷிய புரட்சி பற்றி படித்து ஊக்கமும், உறுதியும் பெற்றனர். இப்படி நாம் பெற்ற வெற்றி என்பது இனி யாரும் படைக்க முடியாத வரலாற்று சாதனை. இந்த வரலாறு பற்றியெல்லாம் தெரியாத சிலர் நம்மை மிரட்டி பார்க்கிறார்கள்.

இன்னும் சில அறிவிலிகள் தி.மு.க.வை போல வெற்றி பெறுவோம் என்று பகல் கனவு காண்கிறார்கள். தி.மு.க.வை போல் வெற்றி பெற, தி.மு.க.வை போல உழைப்பும், அறிவும் தேவை. ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரு தி.மு.க.தான். இப்படி ஒரு இயக்கம் இனி இந்த மண்ணில் தோன்ற முடியாது.

இந்த வரலாற்றையும், நமது கொள்கையையும் தொடர்ந்து இளைய தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கிற காரணத்தால்தான் இளைஞர் அணி செயலாளராக உதயநிதி பொறுப்பேற்றதில் இருந்து லட்சக்கணக்கான இளைஞர்களை கழகத்திற்குள் கொண்டு வந்திருக்கிறார்.

இப்போது இந்த அறிவு திருவிழா மூலமாக இளம் எழுத்தாளர்கள், ஆராய்ச்சியாளர்களை உதயநிதி உருவாக்கிக் கொண்டிருக்கிறார். இதுதான் தந்தை பெரியார் செய்த பணி, கலைஞர் செய்த பணி, நான் விரும்பும் பணி. இதை உதயநிதி செய்கிற காரணத்தால்தான் தந்தை என்பதை விட இந்த இயக்கத்தின் முதன்மை தொண்டன் என்ற வகையில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த நேரத்தில் இளைஞர் அணியினருக்கு நான் ஒரு கோரிக்கை வைக்க விரும்புகிறேன். இங்கு வெளியிடப்பட்ட புத்தகங்களில் இருக்கின்ற கட்டுரைகளை காலத்திற்கு ஏற்ற மாதிரி வீடியோக்களாக மாற்றி சமூக வலைதளங்களில் இளைஞர்களுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும்.

'காலத்தின் நிறம் கருப்பு-சிவப்பு' நூலை அனைவரும் படிக்க வேண்டும். சோனியா காந்தி முதல் அகில இந்திய தலைவர்கள் அனைவரும் தங்கள் பார்வையில் நம்மை அளவிட்டு எழுதி இருக்கிறார்கள். ஒரு மாநில கட்சியை அகில இந்திய தலைவர்களும், மற்ற மாநில தலைவர்களும் புகழ்ந்து எழுதுவது சாதாரணமாக நடந்து விடாது.

ராகுல்காந்தி, "ஒடுக்குமுறையில் இருந்து மக்களை மீட்ட இயக்கம்" என்று சொல்லி இருக்கிறார். லல்லு பிரசாத் யாதவ், "சமூக நீதிக்காக 75 ஆண்டுகள் போராடிய இயக்கம்" என்று பாராட்டி இருக்கிறார்.

பீகார் மாநிலத்தின் முதல்-மந்திரியாக விரைவில் வர இருக்கக்கூடிய, எதிர்பார்த்துக் கொண்டிருக்கக் கூடிய தேஜஸ்வி, "நம்மை ஜனநாயகத்தின் தோழனாக" பார்க்கிறார்.

இந்தியாவே போற்றும் இயக்கமாக நமது தி.மு.க. வளர்ந்திருக்கிறது. இந்த சாதனைகளும், வளர்ச்சிகளும்தான் பலருடைய கண்களை உறுத்துகிறது. நாம் பேசும் சமூக நீதி, சுயமரியாதை, மாநில சுயாட்சி, கூட்டாட்சி ஆகிய கருத்துக்கள் இன்றைக்கு இந்தியா முழுமைக்கும் பரவி விட்டது.

என்னடா, இவர்களை தமிழ்நாட்டிலேயே முடக்க நினைத்தால் இந்தியா முழுக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறார்களே என்று கோபப்படுகிறார்கள். நான் திரும்பவும் சொல்கிறேன். இந்த அறிவுத் திருவிழா, திராவிடம் வெல்லும். அதை காலம் சொல்லும் என்று முழங்கக் கூடிய திருவிழா இது.

இது கூடி கலையும் கூட்டம் அல்ல, காலம் தோறும் கொள்கைகளை கூறிட்டுக் கொள்ளும் கூட்டமாக இருக்கிற காரணத்தால்தான் எத்தனை பெரிய எதிரிகள் வந்தாலும், எத்தனை பெரிய தந்திரங்களை கொண்டும் நம்மை வீழ்த்த முடியவில்லை.

கொள்கை ரீதியாக தி.மு.க.வை வீழ்த்த முடியாத காரணத்தால்தான், இப்போது தேர்தல் ஆணையம் மூலமாக திருட்டுத் தனமாக குறுக்கு வழியில் வீழத்த முடியுமா? என்று முயற்சி செய்து பார்க்கிறார்கள். அதுதான் எஸ்.ஐ.ஆர். மறந்து விடாதீர்கள்.

ஏன் அந்த எஸ்.ஐ.ஆர்.-ஐ அவசர அவசரமாக நடத்த வேண்டும்? தேர்தல் நேரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடியது. இதை வேண்டாம் என்று எல்லா அரசியல் கட்சிகளும் சொல்லியும் ஏன் நடத்த வேண்டும். இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் இதையெல்லாம் காது கொடுத்து கேட்காமல் தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர். பணிகளை தொடங்கி விட்டது.

இதற்கு எதிராக சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். தொடர்ந்து போராட போகிறோம்.

இந்த நேரத்தில் இங்கிருக்கக் கூடிய இளைஞர் அணி தம்பிமார்களை நான் கேட்க விரும்புவது களத்தில் வேலை செய்யும் நீங்கள் எந்தவொரு போலி வாக்காளரும் இருந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

உண்மையான நமது வாக்காளர்கள் விடுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். யாருடைய வாக்குரிமையும் பறி போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கருப்பு-சிவப்பு நிறம் சேர்ந்திருக்கிற போது எந்த காவியாலும் நம்மை எதுவும் செய்ய முடியாது. இந்தியாவையும் ஜனநாயகத்தையும், தமிழ்நாட்டின் எதிர்காலத்தையும் காக்க 2019 முதல் தொடரக்கூடிய நமது பயணம் 2026-லும் மாபெரும் வெற்றியை பெற்று திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும்.

தந்தை பெரியாரின், பேரறிஞர் அண்ணாவின், தலைவர் கலைஞரின் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொள்கை வாரிசுகள் இருக்கும் வரை தமிழ்நாடு தலைகுனியாது, தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, மற்றும் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன், மேயர் பிரியா, துணைமேயர் மகேஷ் குமார், எம்.எல்.ஏ.க்கள் கருணாநிதி, பரந்தாமன், ஆவடி சேகர், எபினேசர், மாவட்டச் செயலாளர் சிற்றரசு.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் வீரபாண்டியன், இரா. முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காதர் மொய்தீன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, அப்துல் சமது, இந்து ராம், நக்கீரன் கோபால், இளைஞர் அணி துணை செயலாளர் எஸ்.ஜோயல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கருத்தரங்கு நாளை மாலை வரை நடைபெறுகிறது. முடிவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிறைவுரை நிகழ்த்துகிறார்.

Tags:    

Similar News