சாத்தியமான திட்டங்களை நிச்சயமாக நிறைவேற்றுவோம் - இ.பி.எஸ். கேள்விக்கு மு.க.ஸ்டாலின் பதில்
- பள்ளிக்கு கூடுதல் கட்டடம் வேண்டும் என கேட்கும்போது அதற்கு சாத்தியம் இல்லை என எப்படி கூற முடியும்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கட்சி பாகுபாடின்றி கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதாக தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை மீதான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று வருகிறது.
சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கேட்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற சாத்தியமில்லை என கூறுவதா? என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
மேலும், பள்ளிக்கு கூடுதல் கட்டடம் வேண்டும் என கேட்கும்போது அதற்கு சாத்தியம் இல்லை என எப்படி கூற முடியும். அறிவித்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தான் கேள்வியை முன்வைக்கின்றோம் என்று கூறினார்.
எடப்பாடி பழனிசாமி கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் எ.வ.வேலு, சாத்தியக்கூறு இல்லை என்று கூறும் பதிலில் உள்நோக்கம் இல்லை. எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கைகளை முறையாக ஆய்வு செய்த பின்னரே சாத்தியக்கூறு உள்ளதா? இல்லையா? என கூறுகிறோம் என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கட்சி பாகுபாடின்றி கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதாக தெரிவித்தார்.
ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் தங்கள் தொகுதிக்கு 10 திட்டங்களை முன்வைக்கலாம். சாத்தியமான திட்டங்களை நிச்சயமாக நிறைவேற்றுவோம் என்று முதலமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்தார்.