பிப்ரவரி 6, 7-ந் தேதிகளில் நெல்லை மாவட்டத்தில் கள ஆய்வு- மு.க.ஸ்டாலின்
- மதுரை மக்கள் காட்டிய அன்பின் மகிழ்வுடன் விழுப்புரம் மாவட்டத்தில் ஆய்வுக்கூட்டத்திற்கு சென்று வந்தேன்.
- உடன்பிறப்புகளின் உற்சாக முகங்களை உங்களில் ஒருவனான நான் கண்டு மகிழ்வேன்.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தி.மு.க. தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டு மக்களின் எண்ணங்களையும் எதிர்பார்ப்புகளையும் எப்பாடு பட்டேனும் நிறைவேற்றித் தரும் உறுதியுடன் செயல்படும் உங்களில் ஒருவனான என் தலைமையிலான திராவிட மாடல் அரசுக்கு மாவட்டங்கள்தோறும் மக்கள் அளித்து வரும் ஆதரவினையும் வரவேற்பினையும் ஒவ்வொரு முறையும் நேரில் கண்டு நெஞ்சம் மகிழ்கிறேன்.
அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிம ஏலத்திற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு திட்டமிட்டபோது, பாராளுமன்றத்தில் கழகம் அதனை எதிர்த்து முழங்கியதுடன், மதுரை மாவட்ட மக்கள், வைகை-முல்லைப்பெரியாறு பாசனப் பகுதி விவசாயிகள், சூழலியல் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட அனைவரின் கருத்து-களையும் அறிந்து, டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, "நான் முதல்-அமைச்சராக இருக்கும்வரை டங்ஸ்டன் சுரங்கம் அமையாது" என்ற உறுதியையும் வழங்கினேன்.
டங்ஸ்டன் கனிமம் எடுக்கும் திட்டத்தைத் திரும்பப் பெறுவதாக பா.ஜ.க. அரசு பணிந்தபிறகு, மதுரை மக்களின் அழைப்பை ஏற்று அங்கு சென்ற உங்களில் ஒருவனான எனக்கு அவர்கள் அளித்த வரவேற்பையும், அவர்கள் பொழிந்த அன்பையும் கடந்த கடிதத்தில் குறிப்பிட்டுக் காட்டியிருந்தேன். மதுரை மக்கள் காட்டிய அன்பின் மகிழ்வுடன் விழுப்புரம் மாவட்டத்தில் ஆய்வுக்கூட்டத்திற்கு சென்று வந்தேன்.
உங்களில் ஒருவனான என் தலைமையிலான திராவிட மாடல் அரசு மீது தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதற்குக் காரணம், மக்களின் நலன் காப்பதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் செயல்படுவதுதான். அரசியல் கண்ணோட்டத்தில் எதிரணியினர் பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும், கழக அரசின் சாதனைகளைப் பொறுக்க முடியாமல் புலம்பிக் கொண்டிருந்தாலும், மக்கள் அவர்களைப் புறக்கணித்து தங்கள் நலன் காக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் பக்கமே நிற்கிறார்கள்.
2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலிலும் மக்கள் ஆதரவு நமக்குத்தான் என்ற நம்பிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது. அந்த நம்பிக்கையை நமக்கு வழங்குகின்ற மக்களுக்கு என்றும் துணை நிற்போம். அவர்களின் ஆதரவுடன் ஏழாவது முறையாகத் தி.மு.கழகம் ஆட்சி அமைக்கும் என்ற வெற்றிக்கு அச்சாரமாக விழாக்கோலம் கண்டது விழுப்புரம் மாவட்டம்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் வெளிப்படும் இந்த நம்பிக்கையின் தொடர்ச்சியாக பிப்ரவரி 6, 7 தேதிகளில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறேன். அப்போது உடன்பிறப்புகளின் உற்சாக முகங்களை உங்களில் ஒருவனான நான் கண்டு மகிழ்வேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.