தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம்?- அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்
- தூய்மைப்பணியாளர்களுக்கான காப்பீட்டு தொகை ரூ.10 லட்சமாக உயர்வு.
- தூய்மை பணியாளர்களுக்கு அந்தந்த ஊராட்சிகள் மூலமாக காலை உணவு இலவசமாக வழங்கப்படும்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர்.
இந்நிலையில் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* முதற்கட்டமாக சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு திட்டங்கள் அமல்படுத்தப்படும்.
* தூய்மை பணியாளர்களுக்கான திட்டங்கள் சென்னையில் தொடங்கி படிப்படியாக மற்ற இடங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
* பணியின்போது இறக்கும் தூய்மை பணியாளர்கள் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தர நடவடிக்கை.
* தூய்மைப்பணியாளர்களுக்கான காப்பீட்டு தொகை ரூ.10 லட்சமாக உயர்வு.
* தூய்மைப் பணியாளர்கள் துறைசார் நோய்களை கண்டறியவும் சிகிச்சை அளிக்க தனி திட்டம்.
* தூய்மை பணியாளர்கள் குழந்தைகள் எந்த பள்ளியில் பயின்றாலும் புதிய உயர்கல்வி உதவித்தொகை திட்டம்.
* தூய்மை பணியாளர்கள் குழந்தைகளுக்கு உயர்கல்வி, விடுதி மற்றும் புத்தக கட்டணத்தை அரசே ஏற்கும்.
* தூய்மை தொழிலாளர்கள் கடனுதவிக்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் முதல்முறையாக சென்னை மாநகராட்சியில் தொடங்கப்படும்.
* தூய்மை பணியாளர்களுக்கு அந்தந்த ஊராட்சிகள் மூலமாக காலை உணவு இலவசமாக வழங்கப்படும்.
* சென்னையை தொடர்ந்து மற்ற நகர்ப்புறங்களிலும் காலை உணவு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* நகர்ப்புற தூய்மை பணியாளர்களுக்காக காலை உணவு இலவசமாக வழங்கப்படும்.
* நகர்ப்புற தூய்மை பணியாளர்களுக்கு 30 ஆயிரம் குடியிருப்புகள் கட்டி தரப்படும்.
* கிராமப்புற தூய்மை பணியாளர்களுக்கு கலைஞர் வீடு திட்டத்தில் முன்னுரிமை
* தூய்மை பணியாளர்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்த 6% வட்டி மானியமும் வழங்கப்படும்.
* நகர்ப்புறங்களில் சொந்த வீடு இல்லாத தூய்மை பணியாளர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும்.
* தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துடன் இணைந்து தூய்மை பணியாளர்கள் வசிக்கும் இடங்களிலேயே புதிய வீடு கட்டித்தரப்படும்.
தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் தொடர்பாக வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்குகளின் முடிவில் பணி நிரந்தரம் தொடர்பாக முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.