தி.மு.க. கூட்டணி கப்பல் உறுதியாக உள்ளது - அமைச்சர் சேகர்பாபு
- இந்து சமய அறநிலைத்துறை என்பது அறம் சார்ந்த ஒரு துறை.
- திருச்செந்தூரில் ஒரு கோடி ரூபாய் செலவில் இன்றைக்கு குடமுழுக்குக்கு உண்டான பணிகள் நடைபெற்று வருகிறது.
சென்னை:
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரும் சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவருமான பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார்.
கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட ராஜா தோட்டம் பகுதியில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டு வரும் புதிய குடியிருப்புகளின் இறுதி கட்டப் பணிகளை பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்து முன்னணி சார்பில் நடைபெறும் முருகர் மாநாடு ஆன்மீகவாதிகளால் நடத்தப்படும் மாநாடு என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். ஆந்திராவில் இருக்கும் பவன் கல்யாணுக்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம். உத்தரப்பிரதேசத்தின் யோகிக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன சம்பந்தம்.
இந்து சமய அறநிலைத்துறை என்பது அறம் சார்ந்த ஒரு துறை. அறம் என்றாலே கோவில்களின் பணிகளை போதிப்பது, மனிதனை ஒழுக்கப்படுத்துவது. ஆனால் இவர்கள் நடத்துகின்ற இந்த மாநாடு இனத்தால், மதத்தால், மொழியால் பிளவுபடுத்துகின்ற மாநாடு.
இறை அன்பர்களுக்கு தேவையான அனைத்தையும் இந்த துறை நிறைவேற்றுவதால் தான் எந்த காலத்திலும் இல்லாத அளவிற்கு 117 முருகன் கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தி உள்ளோம். 136 முருகன் கோவில்களில் குடமுழுக்கு எடுத்துக் கொண்டிருக்கிறோம்.
பெருந்திட்ட வரைவின் காரணமாக எடுத்துக்கொண்ட 846 பணிகள் 1446 கோடி ரூபாய் செலவில் இதுவரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு முருக பக்தர்களுக்கு அதிசயிக்கின்ற வகையில் திருப்பணியை மேற்கொண்டு வருகிறோம்.
பழனியை சென்று பாருங்கள் அங்கு எவ்வளவு ரம்யமான சூழல் நிலவுகிறது. திருச்செந்தூரில் ஒரு கோடி ரூபாய் செலவில் இன்றைக்கு குடமுழுக்குக்கு உண்டான பணிகள் நடைபெற்று வருகிறது.
திருப்பரங்குன்றத்தில் அடுத்த மாதம் 14-ந்தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. தமிழ் கடவுள் முருகனுக்கு சிறப்புக்கு சிறப்பு சேர்க்கின்ற ஆட்சியாக இந்த ஆட்சி திகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆகவே இதுபோன்ற மக்களை பிளவுபடுத்துகின்ற ஒரு சாராரை வைத்து நடத்துகின்ற மாநாடுகள் தேவையற்றது.
தி.மு.க. கூட்டணியில் ஓட்டை விழுந்து விட்டது என வைகை செல்வன் கூறியுள்ளார்.
தி.மு.க. கூட்டணி உறுதிமிக்க கப்பலை போன்றது. இந்த கப்பலை செலுத்துகின்ற மாலுமி பல்வேறு பூகம்பங்கள், புயல், மின்னல் உள்ளிட்டவை சந்தித்து தி.மு.க. என்ற கப்பலை கரைக்கு கொண்டு வந்து ஜார்ஜ் கோட்டையில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். இந்த ஆட்சியின் நீட்சி தொடரும்.
2026 சட்டமன்றத் தேர்தலிலும் திறமைமிக்க இந்த மாலுமியால் எப்படிப்பட்ட கடல் முரணாக இருந்தாலும் கடல் அலையை அரணாக்கி இந்த ஆட்சி தொடர்வதற்கு எல்லாம் வல்ல முருகன் எங்கள் முதலமைச்சருக்கு துணையாக இருப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.