தமிழ்நாடு செய்திகள்

பூம்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்களை பாராட்டி தேனீர் விருந்து அளித்த மா.சுப்பிரமணியன்

Published On 2025-06-29 13:53 IST   |   Update On 2025-06-29 13:53:00 IST
  • திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
  • பூம்பாறையில் டாக்டர்கள், செவிலியர்கள் குடியிருப்பு கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். நேற்று திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சி.டி. ஸ்கேன், டிஜிட்டல் ஸ்கேனர் ஆகியவற்றை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இந்த நிலையில் கொடைக்கானலில் 11 புதிய கட்டிட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களையும் திறந்து வைத்தார். முன்னதாக பூம்பாறை மலைக்கிராமங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு சிறப்பாக பணியாற்றிய டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த கள பணியாளர்களை பாராட்டி தேனீர் விருந்து அளித்தார்.

அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

தமிழகத்தில் 8713 துணை சுகாதார நிலையங்களிலும், 2286 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், ஆஸ்பிரின், கிளோபிடோக்ரல், அட்ரோவாஸ்டாட்டின் ஆகிய 3 மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பூம்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜூன் மாதத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாய்கடி, பாம்பு கடிக்கு மருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் குணமடைந்தவர்களை தொடர்பு கொண்டு பேசி வருகின்றேன். அனைவரும் நன்றாக இருக்கின்றனர். பூம்பாறையில் டாக்டர்கள், செவிலியர்கள் குடியிருப்பு கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டது.

முதலமைச்சர் வழிகாட்டுதல்படி ரூ.87 லட்சம் மதிப்பில் தங்கும் விடுதி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதில் 3 செவிலியர்கள் தங்கும் விடுதி, 2 மருத்துவர்கள் குடியிருப்பு ஆகியவை அடங்கும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News