தமிழ்நாடு செய்திகள்

100 விவசாயிகளை வெளிநாட்டிற்கு அழைத்து செல்ல திட்டம்- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

Published On 2025-04-03 14:15 IST   |   Update On 2025-04-03 14:15:00 IST
  • கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.
  • தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான பணிகள் ரூ.20 கோடியில் விரிவுப்படுத்தப்படும்.

சென்னை:

தமிழக சட்டசபையில் கால்நடை பராமரிப்பு மற்றும் மீன் வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் முடிவில் அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் பேசியதாவது:-

இன்று கிராமப்புற பொருளாதாரம் சிறப்பாக இருப்பதற்கு கால்நடை வளர்ப்பே முக்கிய காரணமாக உள்ளது. 3 பசுமாடுகளை வளர்த்தால் ஒரு குடும்பமே நல்ல பயனை பெற முடியும். ஆடுகள் வளர்ப்பின் மூலம் விவசாயிகள் தங்கள் தேவைக்காக உடனடியாக அவைகளை விற்று தங்களது பண தேவைகளையும் பூர்த்தி செய்ய முடிகிறது.

இதனை கருத்தில் கொண்டு ஆடுகள், மாடுகள், கோழிகளை வளர்ப்பதற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 5 ஆயிரம் சினையுற்ற கறவை பசுக்களுக்கு ரூ.6.65 கோடி நிதி ஒதுக்கீட்டில் 50 சதவீத மானியத்துடன் ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கப்படும். சென்னை அடையாறில் உள்ள செல்லப் பிராணிகள் சிகிச்சை மையம் ரூ.5 கோடியில் தரம் உயர்த்தப்படும்.

செல்லப் பிராணிகளை மனிதாபிமானத்துடன் நடத்துவதற்கு வசதியாக சென்னை மற்றும் கோவையில் ரூ.5 கோடியில் செல்லப்பிராணி பூங்கா, தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும்.

தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான பணிகள் ரூ.20 கோடியில் விரிவுப்படுத்தப்படும்.

கால்நடை விவசாயிகள், கால்நடை வளர்ப்பு குறித்த பல்வேறு நடைமுறைகளை தெரிந்து கொள்ளும் முறையில் அவர்கள் பிற மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ள ரூ.1 கோடி நிதி ஒதுக்கி ஏற்பாடு செய்யப்படும்.

கிராமப்புறங்களில் நிலமற்ற தினக்கூலி தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில், நாட்டின கோழி குஞ்சு வழங்கும் திட்டம்50 சதவீத மானியத்தில் செயல்படுத்தப்படும். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் 16 மீனவ கிராமங்கள் ரூ.32 கோடி செலவில் மேம்படுத்தப்படும். தரமான மீன் மற்றும் மீன் உணவு பொருட்களை நியாயமான முறையில் வழங்குவதற்கு கயல் திட்டம் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News