தமிழ்நாடு செய்திகள்

கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகுமா? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்

Published On 2025-05-01 13:38 IST   |   Update On 2025-05-01 13:38:00 IST
  • தமிழக முதலமைச்சர் சாதிவாரி கணக்கெடுப்புக்கு என்றுமே தயாராக தான் உள்ளார்.
  • தனியார் பள்ளிகள் அதிகப்படியாக பணம் வாங்குவது தவறு.

திருச்சி:

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு எப்பொழுது ஆரம்பிக்கும்? எப்பொழுது முடியும்? என தெரிவிக்காமல் பொத்தாம் பொதுவாக கூறியிருக்கின்றனர். பீகார் உள்பட 5 மாநில தேர்தல் வர இருக்கிறது. தேர்தல்கள் காலம் வரும்பொழுது இதுபோன்று பலவிதமான அறிவிப்புகளை மத்திய அரசிடமிருந்து எதிர்பார்க்கலாம்.

இது அறிவிப்போடு இருந்துவிடாமல் நடைமுறைப்படுத்த வேண்டும் . தமிழக முதலமைச்சர் சாதிவாரி கணக்கெடுப்புக்கு என்றுமே தயாராக தான் உள்ளார். தமிழகத்தில் கடும் வெப்பம் நிலவி வருகிறது.

திருச்சியில் நேற்று கூட 104 வெப்பம் பதிவாகி உள்ளது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் 2-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கூறியிருக்கிறோம். அந்த சமயத்தில் கடும் வெயில் இருந்தால் அது குறித்து முதல்வரிடம் ஆலோசித்து அப்போது முடிவு செய்யப்படும். தனியார் பள்ளிகள் அதிகப்படியாக பணம் வாங்குவது தவறு. அப்படி வாங்க கூடாது. இது குறித்து சட்டமன்றத்தில் பேசும் போது கூறியுள்ளேன். 2009-ல் கட்டணம் நிர்ணயம் செய்வதற்கான ஆணையம் முன்னாள் நீதியரசர்கள் தலைமையில் வைத்துள்ளோம்.

அந்த கமிட்டி என்ன சொல்கிறதோ அவர்கள் நிர்ணயிப்பதை விட அதிக கட்டணம் வாங்கினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே கூறி உள்ளோம். அதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

தமிழக வெற்றிக்கழகம் 2026-ல் தி.மு.க. எதிர்க்கட்சியாக கூட உட்கார முடியாது எனக் கூறியிருப்பது அவர்களது எண்ணம், கட்சி ஆரம்பித்து விட்டார்கள், ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காக அவர்கள் சொல்லுகிறார்கள் என நான் பார்க்கிறேன் . தேசிய கல்விக் கொள்கையை மற்ற மாநிலங்கள் சிறப்பாக அமல்படுத்துகின்றனர்.

தேசிய கல்விக் கொள்கை என்பது மொழி சார்ந்தது மட்டுமல்லாமல், அதில் நிறைய ஷரத்துக்கள் உள்ளன. நாம் 1 முதல் 8ம் வகுப்பு வரை ஆல் பாஸ் என வைத்து உள்ளோம். 9-ம் வகுப்பு, 10-ம் வகுப்புகளில் தான் தேர்வுகள் வைக்கின்றோம்.

ஆனால் தேசிய கல்விக் கொள்கையில் 3, 5-ம் வகுப்புகளுக்கு தேர்வுகள் உள்ளன. இது குழந்தைகளின் இடைநிற்றலை அதிகப்படுத்தும் என்பதும் ஒரு காரணம். குறிப்பாக நாம் இரு மொழிக் கொள்கையில் தீவிரமாக இருக்கும் போது அவர்கள் தோல்வியடைந்த மும்மொழிக் கொள்கையை பின்பற்றுமாறு கூறுகின்றனர். அது ஏற்கத்தக்கது அல்ல.

ஆசிரியர் காலி பணியிடங்கள் பொறுத்தவரை நீங்கள் காத்திருப்பது போலவே நாங்கள் நீதிமன்ற தீர்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். அது வந்தவுடன் அவர்களுக்கு பணியிடங்கள் நிரப்பப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News