மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
- இன்று காலை முதல் கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 43 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
- அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக உள்ளது.
சேலம்:
கர்நாடகாவில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. கடந்த 27-ந்தேதி மாலையில் இருந்து நேற்று காலை 9 மணி வரை சுமார் 1.10 லட்சம் கனஅடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டு இருந்தது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் குறைந்தது. இன்று காலை முதல் கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 43 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதனால் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து வினாடிக்கு 30 ஆயிரத்து 500 கனஅடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக உள்ளது. அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 93.47 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.