மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 17,235 கன அடியாக சரிந்தது
- மழை தணிந்து வருவதால் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவும் குறைக்கப்பட்டது.
- கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.
மேட்டூர்:
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, அங்குள்ள அணைகள் நிரம்பியது. இதையடுத்து, கபினி, கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டது. நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக, மேட்டூர் அணை வரலாற்றில் முழு கொள்ளவான 120 அடியை கடந்த ஜூன் மாதம் 29-ந் தேதி 44-வது முறையாக எட்டியது. பின்னர், அணை நீர்மட்டம் சரிந்து மீண்டும் கடந்த ஜூலை மாதம் 5-ந் தேதி நடப்பாண்டில் 2-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது.
தற்போது மழை தணிந்து வருவதால் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவும் குறைக்கப்பட்டது. அதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது.
நேற்று காலையில் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 17,485 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 17,235 கனஅடியாக குறைந்தது. நீர்மட்டம் 119.56 அடியாகவும், நீர் இருப்பு 92.77 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 18,000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றிலும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.