மெட்ரோ திட்ட அறிக்கை: திமுக அரசின் கவனக்குறைவு- எடப்பாடி பழனிசாமி
- மேகதாது அணை கட்டுவதை தடுக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தில் மாநில அரசிடம்தான் குளறுபடி உள்ளது.
சேலம் விமான நிலையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடகாவில் மேகதாது அணை கட்டினால் காவிரி படுகை மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும். மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மெத்தனமாக உள்ளது.
மேகதாது அணை கட்டுவதை தடுக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. இந்தியா கூட்டணியில் உள்ள முதல்வர் ஸ்டாலின் இதுபற்றி பேச வேண்டும்.
அதிமுக ஆட்சியில் தான் கோவை மெட்ரோ ரெயில் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் 2024ஆம் ஆண்டில் தான் விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசு அனுப்பி வைத்தது.
கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை திமுக அரசு கவனக்குறைவாக அனுப்பியுள்ளது. திட்ட அறிக்கையை சமர்ப்பித்தபோது 2011 மக்கள்தொகையை திமுக அரசு குறிப்பிட்டது ஏன்? 2025ஆம் ஆண்டு மக்கள்தொகையை கணக்கிட்டு அனுப்பியிருந்தால் ஒப்புதல் கிடைத்திருக்குமே?
கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தில் மாநில அரசிடம்தான் குளறுபடி உள்ளது. அதிமுக ஆட்சி அமைந்த உடன், கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.