தமிழ்நாடு செய்திகள்

ஆற்றில் மூழ்கி இறந்தவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுத நண்பர்கள்

சுற்றுலா சென்ற சென்னை மருத்துவ மாணவர்கள் 3 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

Published On 2025-04-25 11:15 IST   |   Update On 2025-04-25 11:39:00 IST
  • தனியார் கல்லூரி மருத்துவ மாணவர்கள் கோவைக்கு சுற்றுலா சென்றனர்.
  • மாணவர்கள் தருண், ரேவந்த், ஆண்டோ ஜெனிப் ஆற்றில் மூழ்கி பலியாகினர்.

பொள்ளாச்சி:

சென்னையை சேர்ந்தவர் தருண். இவரது நண்பர்கள் ரேவந்த், ஆண்டோ ஜெனிப். இவர்கள் 3 பேரும் சென்னை பூந்தமல்லியில் தனியார் பிசியோதெரபி கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்தனர்.

இந்த நிலையில் தருண் மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். இதையடுத்து தருண், ரேவந்த், ஆண்டோ ஜெனிப் மற்றும் அவர்களது நண்பர்கள், தோழிகள் என மொத்தம் 25 பேர் சென்னையில் இருந்து கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு வந்தனர்.

பின்னர் ஆழியார் அணை பகுதிக்கு நண்பர்கள் அனைவரும் சென்றனர். அங்கு அவர்கள் ஆழியார் அணையையொட்டி உள்ள பூங்கா பகுதியை சுற்றி பார்த்தனர்.

தொடர்ந்து அவர்கள் ஆழியார் அணைக்கு சென்று அதனை பார்வையிட்டனர்.

பின்னர் மாணவர்கள் அனைவரும், அணையையொட்டி உள்ள ஆழியார் ஆற்றுக்கு சென்றனர்.

அங்கு சென்றதும், மாணவர்கள் அனைவரும் ஆழியார் ஆற்றில் இறங்கி குளித்தனர். அப்போது, ரேவந்த், தருண், ஆண்டோ ஜெனிப் ஆகியோர் ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது.

எதிர்பாராத விதமாக 3 பேரும் தண்ணீரில் மூழ்கினர். இதைப்பார்த்த மற்ற நண்பர்கள் காப்பாற்றுங்கள். காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டனர்.

அவர்களது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். மேலும் இதுதொடர்பாக ஆழியார் போலீசாருக்கும், பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் ஆழியார் போலீசார் தீயணைப்பு வீரர்களுடன் ஆற்றில் இறங்கி தேடினர். நீண்ட நேர போராட்டத்திற்கு ஆற்றில் மூழ்கிய 3 பேரும் பிணமாக மீட்கப்பட்டனர்.

அவர்களின் உடல்களை போலீசார் பிரேத பரிசோதனைக்கா பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. 

Tags:    

Similar News