தமிழ்நாடு செய்திகள்

நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ? - ம.தி.மு.க. மாநாட்டில் முழங்கிய துரை வைகோ

Published On 2025-09-16 12:32 IST   |   Update On 2025-09-16 15:22:00 IST
  • என் தந்தை எனக்கு அளித்த மிகப்பெரிய சொத்து இந்த மறுமலர்ச்சி சொந்தங்களின் அன்பு தான்.
  • நேசிப்பால், அன்பால், உருவான ஒரு உறவு தான் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் என்ற உன்னதமான இயக்கம்.

திருச்சி சிறுகனூரில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழா ம.தி.மு.க. மாநாட்டில், கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி. பேசியதாவது:-

தலைவர் மீது நீங்கள் கொண்டுள்ள காதல், இந்த இயக்கத்தின்மீது நீங்கள் கொண்டுள்ள விசுவாசம், உலகில் வேறு எங்கும் இந்த பந்த பாசத்தை பார்க்க முடியாது.

என் தந்தை எனக்கு அளித்த மிகப்பெரிய சொத்து இந்த மறுமலர்ச்சி சொந்தங்களின் அன்பு தான். ஆயிரம் ஆயிரம் கோடிகள் கொடுத்தால் பெற முடியாதது. விலை மதிப்பற்றது. எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல் தலைவர் மீது கொண்ட காதலால், நேசிப்பால், அன்பால், உருவான ஒரு உறவு தான் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் என்ற உன்னதமான இயக்கம்.

அப்படிப்பட்ட இந்த இயக்கத்தை அழித்து விடலாம், பிளவுபடுத்தலாம் என்று கடந்த 32 ஆண்டுகளாக சிலர் முயற்சித்தனர். இப்போதும் முடியவில்லை, எப்போதும் முடியாது.

இமயமலையை கூட நகர்த்தி விடலாம். ஆனால் லட்சக்கணக்கான மறுமலர்ச்சி சொந்தங்களின் இதயத்தில் குடியிருக்கும் இந்த இயக்கத்தை யாராலும் அசைக்க முடியாது.

இதை சொல்லும்போது, மகாகவி பாரதியின் கவிதைதான் என் நினைவுக்கு வருகிறது.

தேடிச் சோறுநிதந் தின்று - பல

சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்

வாடித் துன்பமிக உழன்று - பிறர்

வாடப் பலசெயல்கள் செய்து - நரை

கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்

கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல

வேடிக்கை மனிதரைப் போலே - நான்

வீழ்வே னன்றுநினைத் தாயோ?

பல வேடிக்கை மனிதரைபோல் நான் வீழ்வேன் என்று நீ நினைத்தாயோ? வீழ்ந்தது நீதான். நான் வீழவில்லை. நீங்களும் வீழவில்லை.

பேரறிஞர் அண்ணா கனவு கண்ட  தமிழகம் ஒரு வலிமையான தமிழகம், ஒரு வளமாக தமிழகம் அடையும் வரை நாம் வீழப்போவதில்லை. மறுமலர்ச்சி தி.மு.க வீழப்போவதில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News