தமிழ்நாடு செய்திகள்

மருதமலை வனப்பகுதியில் பலியான யானையின் வயிற்றில் ஆண் குட்டி யானை: பிரேத பரிசோதனையில் தகவல்

Published On 2025-05-21 13:51 IST   |   Update On 2025-05-21 13:51:00 IST
  • 5 கால்நடை டாக்டர்கள் கொண்ட குழுவினர் யானைக்கு சிகிச்சை அளித்தனர்.
  • கடந்த 3 நாட்களாக கால்நடை டாக்டர்கள் யானைக்கு தொடர் சிகிச்சை அளித்து வந்தனர்.

வடவள்ளி:

கோவை மருதமலை அருகே கடந்த 17-ந்தேதி நோய்வாய்ப்பட்டு தனது குட்டியுடன் ஒரு பெண் யானை மயங்கிய நிலையில் இருந்தது.

தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து யானையை கண்காணித்தனர்.

துரியன் மற்றும் சுயம்பு ஆகிய 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு, கும்கிகள் உதவியுடன் யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 5 கால்நடை டாக்டர்கள் கொண்ட குழுவினர் யானைக்கு சிகிச்சை அளித்தனர்.

கடந்த 3 நாட்களாக கால்நடை டாக்டர்கள் அந்த யானைக்கு தொடர் சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று ஹைட்ரோ தெரபி சிகிச்சை வழங்குவதாக கூறி யானையை குழிக்குள் இறக்கி நீரை ஊற்றி சிகிச்சை அளித்தனர்.

அப்போது சிறிது நேரத்திலேயே அந்த யானை உயிரிழந்தது.

இன்று காலை இறந்த பெண் யானைக்கு பிரேத பரிசோதனை நடைபெற்றது.

மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், கோவை வனச்சரக அலுவலர் திருமுருகன், வனவர் அய்யப்பன், வனக்காப்பாளர் சரவணக்குமார், ஆனைமலை புலிகள் காப்பாக கால்நடை டாக்டர் சுகுமார், கால்நடை மருத்துவர்கள் விஜயராகவன், முகில் அரசு ஆகியோர் முன்னிலையில் யானை உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

அப்போது வயிற்றில் 15 மாத குட்டி யானை இருந்தது தெரியவந்தது.

அந்த குட்டி யானையை வனத்துறையினர் வெளியில் எடுத்தனர். அந்த குட்டி யானையும் இறந்த நிலையிலேயே இருந்ததும் தெரியவந்தது.

கடந்த 3 நாட்களாக சிகிச்சை அளித்து வந்த வனத்துறையினர் பெண் யானை கருவுற்று இருந்ததை கண்டறியாமல் இருந்தது வன ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Tags:    

Similar News