தூய்மை பணியாளர்கள் கைது: போலீசுக்கு எதிராக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது - ஐகோர்ட்
- தூய்மைப் பணியாளர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க போராட்டம் நடத்தலாம்.
- அனுமதி பெற்று நடத்தும் போராட்டத்தை தடுத்திருந்தால், நீதிமன்றம் தலையிடும்.
சென்னை:
தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கச் சென்ற 20 வக்கீல்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாகக் கூறி, சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டு உள்ளது.
நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அமர்வில், வக்கீல்கள் ரமேஷ், வேல்முருகன், கிருஷ்ணகுமார் ஆகியோர் ஆஜராகி, 20 வக்கீல்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரு சட்டக்கல்லூரி மாணவர் காணாமல் போய்விட்டார். அவர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை. இதுசம்பந்தமான வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுக்க வேண்டும் எனக் கோரினர்.
இதுசம்பந்தமாக மனுவாக தாக்கல் செய்யும்படி அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கை பிற்பகல் விசாரணை செய்யப்படும் என தெரிவித்தனர்.
முன்னதாக, தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்தும்போது கட்டுப்பாட்டுடன் செயல்பட காவல் துறைக்கு அறிவுறுத்தியிருந்த நிலையில், காவல் துறையினர் அத்துமீறி செயல்பட்டுள்ளனர். அதனால் போராட்டம் நடத்த மாற்று இடம் ஒதுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டது.
இந்த முறையீட்டைக் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, தூய்மைப் பணியாளர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க போராட்டம் நடத்தலாம். அதற்கு உரிமை உள்ளது. அனுமதி பெறாமல் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டதால், அவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது எனத் தெரிவித்தது.
அனுமதி பெற்று நடத்தும் போராட்டத்தை தடுத்திருந்தால், நீதிமன்றம் தலையிடும். இந்த விவகாரத்தில் எந்த மனுவும் இல்லாமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என தலைமை நீதிபதி அமர்வு மறுத்து விட்டது.