சர்ச்சை பேச்சு: என்ன வேண்டுமானாலும் பொன்முடி பேசிவிட முடியுமா?- உயர்நீதிமன்றம் கண்டனம்
- இது ஜனநாயக நாடு, மக்களுடன்தான் தானும் வசிக்கிறோம் என்ற எண்ணம் அமைச்சருக்கு வரவேண்டும்.
- அனைத்து அரசியல்வாதிகளும் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வானமே தங்கள் எல்லை என்ற எண்ணத்தில் செயல்படுகிறார்கள்.
சைவ வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறியதாவது:-
பதவியில் இருக்கிறோம் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பொன்முடி பேசிவிட முடியுமா?. ஒரு நபரை கொலை செய்துவிட்டு நான் கொலை செய்ய விரும்பவில்லை என்று கூற முடியுமா? சைவம் வைணவம் பிரிவுகள் தொடர்பாக இஷ்டம் போல் கருத்து தெரிவிப்பது சரியா?
இந்த நாட்டில் என்னதான் நடக்கிறது. இது ஜனநாயக நாடு, மக்களுடன்தான் தானும் வசிக்கிறோம் என்ற எண்ணம் அமைச்சருக்கு வரவேண்டும்.
இதுபோல பேசும் நபர்களின் வாயை கட்டுப்படுத்த இந்த நீதிமன்றம் விரும்புகிறது. மனுதாரர் மட்டுமல்ல அனைத்து அரசியல்வாதிகளும் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வானமே தங்கள் எல்லை என்ற எண்ணத்தில் செயல்படுகிறார்கள். அவர்களின் இதுபோன்ற பேச்சுக்களை நீதிமன்றம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அரசியல்வாதிகளும் அரசியல் சாசனத்தை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
ஆரம்பகட்ட விசாரணை என்பது புகாரில் குறிப்பிட்ட சம்பவம் நடந்ததா இல்லையா என்பது குறித்து விசாரிப்பது தான். அதன் பிறகு வழக்கு பதிவு செய்ய வேண்டும். அந்த வழக்கின் முடிவை நீதிமன்றம் தீர்மானிக்கும் என்று தெரிவித்த நீதிபதி, வேண்டாதவர்களுக்கு எதிராக புகார் வந்தால் அதில் முகாந்திரம் உள்ளதாக கூறும் நிலையில், ஆதரவாளர்கள் என்றால் முகாந்திரம் இல்லை என்று கூறுகிறீர்கள். ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில் புலன் விசாரணை அதிகாரி தீர்ப்பு எழுத முடியாது என்றும் நீதிபதி தெரிவித்தார்.