தமிழ்நாடு செய்திகள்

துறையூர் அருகே விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்கள் லாரியில் மோதி பலி

Published On 2025-08-29 14:39 IST   |   Update On 2025-08-29 14:39:00 IST
  • டிப்பர் லாரியின் உரிமையாளர் மற்றும் லாரி டிரைவர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
  • விபத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

துறையூர்:

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள முருகூர் கிராமத்தை சேர்ந்தவர் சரண் ராஜ் (23). இவரது நண்பர் விக்னேஷ் (20). இவர்கள் இருவரும் சவுண்ட் சர்வீஸ் அமைப்பது மற்றும் பந்தல் அமைப்பது உள்ளிட்ட பணிகளை செய்து வந்தனர்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் இன்று காலை துறையூருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். ஆத்தூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே சென்ற போது முன்னால் டிப்பர் லாரி சென்றது.

இருவரும் அந்த லாரியை முந்தி செல்வதற்கு முயற்சி செய்தனர். இந்த வேளையில் எதிர் திசையில் கிரேன் வாகனம் ஒன்று வந்ததால், தங்களுடைய இருசக்கர வாகனத்தை இடது புறமாக திருப்பினர். அப்பொழுது எதிர்பாராதவிதமாக டிப்பர் லாரியில் மோதி சரண் ராஜ் மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனை அடுத்து டிப்பர் லாரி டிரைவர், லாரியை சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு தப்பி சென்று விட்டார். இச்சம்பவத்தை அறிந்த துறையூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று பலியான 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் டிப்பர் லாரியின் உரிமையாளர் மற்றும் லாரி டிரைவர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News