திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்
- யாகசாலை குண்டங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- கடற்கரையில் மேடு, பள்ளங்கள் அகற்றப்பட்டு சமப்படுத்தப்பட்டு வருகிறது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 7-ந்தேதி கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.
இதையொட்டி அன்று காலை 6.15 மணிக்கு மேல் 6.50க்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதற்கான யாகசாலை குண்டங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வருகிற 1-ந்தேதி யாகசாலை பூஜையுடன் விழா தொடங்குகிறது.
அதற்கு முன்பாக பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த மெகா திட்ட வளாக பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அதன்படி கோவில் முன்பு சண்முக விலாசத்தில் இருந்து ஏற்றம் காணும் இடங்களில் தரையில் கல் பதிக்கும் வேலை நடைபெற்று முடிவடையும் நிலையில் உள்ளது. அதே போல் கடற்கரையில் மேடு, பள்ளங்கள் அகற்றப்பட்டு சமப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கும்பாபிஷேக பணிகளை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, அறநிலையத்துறை அதிகாரிகள், மாவட்ட கலெக்டர் இளம்பகவத் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர். நேற்று கலெக்டர் இளம்பகவத் பல்வேறு மார்க்கங்களில் இருந்து வரும் வாகனங்கள் நிறுத்தும் இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். காவல்துறை உயர் அதிகாரிகள், பக்தர்கள் பாதுகாப்பு குறித்து அடிக்கடி கோவில் பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான கழிப்பிடம், குடிநீர் வசதி, மருத்துவ வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.