கொடநாடு வழக்கில் ஆஜராக வந்த கர்சன் செல்வம்.
கொடநாடு எஸ்டேட் ஊழியர் தற்கொலை வழக்கு: சி.பி.சி.ஐ.டி போலீசில் கோத்தகிரி கர்சன் செல்வம் ஆஜர்
- கொடநாடு எஸ்டேட்டில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்த தினேஷ்குமார் என்பவர் தற்கொலை செய்து கொண்டார்.
- கர்சன் செல்வத்திடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கொடநாட்டில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது.
இதுதொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது இவர்கள் ஜாமினில் உள்ளனர்.
இந்த வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுவரை 300க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடந்துள்ளது.
இந்த நிலையில் கொடநாடு எஸ்டேட்டில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்த தினேஷ்குமார் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான வழக்கையும் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக விசாரிப்பதற்காக கோத்தகிரியை சேர்ந்த கர்சன் செல்வம் என்பவரிடம் விசாரணை நடத்த திட்டமிட்ட சி.பி.சி.ஐ.டி போலீசார் அவருக்கு இன்று ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி இருந்தனர்.
அதன்படி கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் கர்சன் செல்வம் இன்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த முக்கிய குற்றவாளியான சயானுக்கும் வருகிற 24-ந் தேதி நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.