தமிழ்நாடு செய்திகள்

கொடநாடு வழக்கு: முன்னாள் பாதுகாப்பு அதிகாரிக்கு சம்மன்

Published On 2025-03-07 10:30 IST   |   Update On 2025-03-07 12:27:00 IST
  • இதுவரை 250க்கும் மேற்பட்டோரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்துள்ளனர்.
  • கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் 8 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடந்தது.

கோவை:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா மற்றும் எஸ்டேட் உள்ளது.

இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இதுதொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் ஜாமீனில் வெளியில் உள்ளனர்.

இது தொடர்பான வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கினை தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதுவரை 250க்கும் மேற்பட்டோரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்துள்ளனர். கடந்த வாரமும் சிலருக்கு சம்மன் அனுப்பி, அவர்களிடமும் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி, அவர்கள் கூறியவற்றை வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டனர்.

இந்த நிலையில் கொடநாடு வழக்கு தொடர்பாக கொடநாடு எஸ்டேட்டின் மேலாளர் நடராஜன் விசாரணைக்கு ஆஜராகுமாறு சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.

இதையடுத்து அவர் நேற்று கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

அவரிடம் போலீசார், சசிகலா கொடநாடு எஸ்டேட் வந்தபோது பங்களாவில் உள்ள அறைகளை பார்த்து விட்டு ஏதாவது கேட்டாரா? கணினி ஆபரேட்டர் தினேஷ் தற்கொலை குறித்து உங்களுக்கு ஏதாவது தெரியுமா? என பல்வேறு கேள்விகளை எழுப்பி, விசாரணை மேற்கொண்டனர். கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் 8 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடந்தது.

இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா மற்றும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாளுக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர்.

அதில் வருகிற 11-ந் தேதி கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொடநாடு வழக்கில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பலரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மீண்டும் விசாரணை தீவிரமடைந்துள்ளதால் கொடநாடு வழக்கு சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

Tags:    

Similar News