வடலூரில் கர்நாடக அரசு பேருந்து - லாரி மோதி விபத்து: 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
- வடக்கு 4 முனை சந்திப்பு அருகே சேலத்திலிருந்து வந்த லாரி பேருந்து மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது.
- ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, பேருந்து மீது மோதி சென்டர்மீடியனில் ஏறி நின்றது.
வடலூர்:
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்கு செல்வதற்காக சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி கொண்டு கர்நாடகா அரசு சொகுசு பஸ் நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் பெங்களூருவில் இருந்து புறப்பட்டு வந்தது.
இந்த பஸ் கடலூர் மாவட்டம் வடலூர் 4 முனை சந்திப்புக்கு அதிகாலை 4 மணி அளவில் வந்தபோது சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்த லாரியும் திடீரென்று எதிர்பாராத மோதி விபத்து ஏற்பட்டது. இதில் லாரி அருகில் இருந்த சென்டர் மீடியனில் மோதி நின்றது.
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த பெங்களூருவை சேர்ந்த பெக்கலாட் வில்சன் சாமு மனைவி மேரி (44), சக்ரா மனைவி வித்யா (55), சுப்ரமணிய ராவ் மனைவி ஜெயமாலா( 50), கோலார் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (50), கிருஷ்ணமூர்த்தி (52) உட்பட 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் வடலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து வந்து விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்த பயணிகளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு 2 பேரை மேல் சிகிச்சைக்காக கடலூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சென்டர்மீடியனில் மோதி நின்று கொண்டிருந்த லாரியை ஜே.சி.பி.மற்றும் கிரேன் எந்திரம் மூலம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி வடலூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையிலான போலீசார் அப்புறப்படுத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.