தமிழ்நாடு செய்திகள்

வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து ஜெ.தீபா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

Published On 2025-09-19 13:18 IST   |   Update On 2025-09-19 13:18:00 IST
  • ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, அவர் ரூ.36 கோடிக்கு வருமான வரி பாக்கி வைத்திருந்தார்.
  • வருமான வரித்துறை நோட்டீசை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தீபா வழக்கு தொடர்ந்தார்.

சென்னை:

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வமான வாரிசுகளாக அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா, மகன் ஜெ.தீபக் ஆகியோரை அறிவித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, அவர் ரூ.36 கோடிக்கு வருமான வரி பாக்கி வைத்திருந்தார்.

அவர் இறந்த பின்னர், இந்த தொகையை செலுத்தும்படி அவரது சட்டப்படியான வாரிசுகளுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. அதில், ரூ.36 கோடியை செலுத்தும்படி உத்தரவிட்டிருந்தது. இந்த நோட்டீசை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தீபா வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, நோட்டீசுக்கு தடை விதித்து ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில், இந்த வழக்கு இறுதிக்கட்ட விசாரணைக்காக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சி.சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதா பாக்கி வைத்துள்ள ரூ.36 கோடியை கேட்டு தீபாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

தற்போது, அந்த நோட்டீஸ் திரும்ப பெறப்பட்டு விட்டது. அந்த தொகையை ரூ.13 கோடியாக குறைத்து, திருத்தி அமைக்கப்பட்ட நோட்டீசு மீண்டும் அனுப்பப்பட்டுள்ளது என்று வருமான வரித்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ''ரூ.36 கோடி செலுத்தும்படி வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை திரும்ப பெற்று விட்டதால், அதை எதிர்த்து தொடரப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன். ரூ.13 கோடி கேட்டு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து தீபா சட்டப்படியாக நிவாரணத்தை கோர உரிமை உள்ளது'' என்று உத்தரவிட்டார்.

Tags:    

Similar News