தமிழ்நாடு செய்திகள்

ஐ.டி.ஊழியர் கொலை வழக்கு: சென்னை ஐகோர்ட் வக்கீல்கள் குழுவினர் நெல்லையில் ஆய்வு

Published On 2025-08-09 14:58 IST   |   Update On 2025-08-09 14:58:00 IST
  • 5 பேர் கொண்ட வக்கீல்கள் குழு இந்த விவகாரத்தில் உண்மை தன்மை கண்டறிவதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
  • பாதிக்கப்பட்ட கவின் இல்லத்திற்கு சென்ற அந்த குழுவினர், சம்பவம் தொடர்பாக கவின் பெற்றோர் மற்றும் சகோதரரிடம் கேட்டறிந்தனர்.

நெல்லை:

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த ஐ.டி. ஊழியரான கவின் (வயது 27) என்ற வாலிபர் கடந்த மாதம் 27-ந்தேதி பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் காதல் விவகாரத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் கே.டி.சி.நகர் பகுதியை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன், அவரது மகன் சுர்ஜித் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி. விசாரித்து வருகிறது.

இந்த கொலை வழக்கு தொடர்பாக பல்வேறு தகவல்கள் சமூக வலைதளத்தில் பரவி வரும் சூழலில் சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்களான சுரேஷ், தமிழ்வாணன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட வக்கீல்கள் குழு இந்த விவகாரத்தில் உண்மை தன்மை கண்டறிவதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி நேற்று அந்த குழு நெல்லைக்கு வந்தது. தொடர்ந்து கவின் கொலை சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்டதுடன் இந்த வழக்கை விசாரித்த நெல்லை மாநகர போலீசார், இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தரப்பிற்கு உதவிய வழக்கறிஞர்கள் உள்ளிட்டோரிடம் நேரில் தகவல்களை திரட்டினர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட கவின் இல்லத்திற்கு சென்ற அந்த குழுவினர், சம்பவம் தொடர்பாக கவின் பெற்றோர் மற்றும் சகோதரரிடம் கேட்டறிந்தனர்.

தொடர்ந்து இன்று 2-வது நாளாக நெல்லை மாவட்ட கலெக்டர், ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள், சி.பி.சி.ஐ.டி. போலீசார் உள்ளிட்டவர்களிடமும் தகவல் திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்தவர்கள், சமூக அக்கறையுடன் செயல்பட்டவர்கள் போன்ற பலரிடமும் தகவல்களை திரட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், தொடர்ந்து சேகரிக்கப்படும் தகவல்கள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டு பொதுவெளியில் அறிக்கையாக சமர்ப்பிக்கப்படும் எனவும் அந்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை அரசுக்கும் சமர்ப்பித்து ஆணவ படுகொலைக்கு எதிரான சட்டம் இயற்றுவதற்கு வலியுறுத்தப்படும் என அந்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News