இருட்டுக்கடைக்கு உரிமை கோரும் நிறுவனரின் பேரன் - பொது அறிவிப்பு வெளியிட்டதால் பரபரப்பு
- சுலோச்சனா பாய் உயிரிழப்புக்கு சில மாதங்கள் முன்பாகவே கடை நிர்வாகத்தை அவரது அண்ணன் மகள் கவிதா எடுத்து நடத்தி வந்தார்.
- நயன் சிங், கவிதா உள்ளிட்டோர் ஊதியம் பெறும் பணியாளர்களாகவே கடையில் பணியாற்றி வந்ததாக தெரிவித்துள்ளார்.
நெல்லை:
நெல்லை டவுன் நெல்லையப்பர் ரத வீதியில் கடந்த 125 ஆண்டுகளுக்கு முன்பாக ராஜஸ்தானை சேர்ந்த ராம் சிங் தனது மகன்களுடன் இணைந்து இருட்டுக்கடையை தொடங்கினார்.
ராம் சிங்கிற்கு 4 மகன்கள் இருந்த நிலையில் 3-வது மகனான கிருஷ்ணசிங் கடையை தனது தந்தையோடு இணைந்து நடத்தி வந்தார். இவரது மறைவிற்கு பிறகு கிருஷ்ணசிங்கின் மகன் பிஜிலி சிங் தனது மனைவி சுலோசனா பாய் உடன் இணைந்து கடையை நிர்வகித்து வந்தார். பிஜிலி சிங் 2000-ம் ஆண்டு உயிர் இழந்த நிலையில் அவரது மனைவி சுலோச்சனா பாய் 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உயிரிழந்தார். அதுவரை இருட்டுக்கடையில் எவ்வித பிரச்சினையும் ஏற்படவில்லை. ஒருவர் மீது ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போதிலும் வெளிப்படையாக பிரச்சினை விவாதிக்கப்படவில்லை.
சுலோச்சனா பாய் உயிரிழப்புக்கு சில மாதங்கள் முன்பாகவே கடை நிர்வாகத்தை அவரது அண்ணன் மகள் கவிதா எடுத்து நடத்தி வந்தார். தற்போது வரை இருட்டுக்கடை கவிதாவின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. அவரது மகள் திருமணத்திற்கு பிறகு கணவர் குடும்பத்தோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து மகள் தனது தாய் (கவிதா) வீட்டில் வாழ்கிறார்.
இந்த நிலையில் கவிதாவின் மருமகன் குடும்பத்தினர் கடையை தங்களுக்கு வரதட்சணையாக கேட்டதாக கூறப்பட்டதில் இருந்து முதன்முதலாக இப்பிரச்சனை வெளியே வந்தது.
இதனிடைய கவிதாவின் சகோதரர் நயன் சிங் கடையில் தனக்கே உரிமை உள்ளது என பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதற்கு கவிதாவின் தரப்பு மறுப்பு அறிவிப்பை வெளியிட்டது. பிஜிலி சிங் - சுலோசனா பாய் தம்பதிகளுக்கு நேரடி வாரிசு இல்லாத நிலையில் சுலோச்சனா பாயின் சகோதரர் குழந்தைகளான கவிதா மற்றும் நயன் சிங் சொத்துக்காக மோதிக் கொள்ளும் நிலையில் தற்போது புதிதாக ஒருவர் பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆரம்ப காலகட்டத்தில் கடையை நிர்வகித்து வந்த கிருஷ்ணசிங்கின் மூத்த சகோதரர் உதய் சிங். இவரது மகன் வழிப்பேரனான பிரேம் ஆனந்த் சிங் தற்போது சென்னையில் வசிக்கும் நிலையில் அவர் ஆண் வாரிசான தனக்கே கடை உரிமை உள்ளது என்ற அடிப்படையில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கிருஷ்ணசிங்கின் அண்ணன் பேரன் என்ற அடிப்படையில் உரிமை கோரும் அவர் நயன் சிங், கவிதா உள்ளிட்டோர் ஊதியம் பெறும் பணியாளர்களாகவே கடையில் பணியாற்றி வந்ததாக தெரிவித்துள்ளார்.
சட்டப்பூர்வமாக கடையை கைப்பற்றுவேன் என்றும் இது தொடர்பாக கடந்த 2023-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும், வழக்கு தற்போது விசாரணையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சிறப்பு வாய்ந்த இருட்டுக்கடைக்கு ஏற்கனவே இருவர் உரிமை கொண்டாடும் நிலையில் 3-வது நபராக ஒருவர் தற்போது உரிமை கோரியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.