தமிழ்நாடு செய்திகள்

சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு- கன்னியாகுமரி கண்ணாடி பாலத்துக்கு கூடுதல் படகுகள் இயக்கம்

Published On 2025-05-20 11:21 IST   |   Update On 2025-05-20 11:21:00 IST
  • தற்போது 5 படகுகள் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை கண்ணாடி பாலத்தை பார்வையிட செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு வசதிக்காக இயக்கப்பட்டு வருகிறது.
  • சுற்றுலாப் பயணிகள் படகில் பயணம் செய்ய மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்து வந்தது.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சமீபத்தில் திறக்கப்பட்ட கண்ணாடி பாலம் மற்றும் கோடை விடுமுறை சீசன் காலம் ஆகியவை சுற்றுலாப் பயணிகளின் வருகையை இருமடங்காக உயர்த்தி உள்ளது.

இதனையடுத்து கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் படகு சேவையில் தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுவரை பொதிகை, குகன் மற்றும் விவேகானந்தா ஆகிய 3 படகுகள் மட்டுமே இந்த சேவையில் பயன்பட்டு வந்தன. ஆனால் தற்போது, விவேகானந்தா படகு பழுது பார்க்கும் பணிக்காக சின்னமுட்டம் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு கரையேற்றப்பட்டுள்ளதால், சில வாரங்களாக 2 படகுகள் மட்டுமே சேவையில் இருந்தன. இதனால் சுற்றுலாப் பயணிகள் கூட்டத்தை சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த சூழ்நிலையில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரிக்காக பயன்படுத்தப்பட்டு வந்த சொகுசு படகுகளான 'திருவள்ளுவர்' மற்றும் 'தாமிரபரணி' ஆகிய 2 படகுகளை வட்டக்கோட்டைக்கு இயக்குவதற்கு பதிலாக விவேகானந்தர் மண்டபத்துக்கு இயக்கி வருகிறது.

மேலும் விவேகானந்த கேந்திரத்துக்கு சொந்தமான 'ஏகநாத்' படகும் ஒப்பந்த அடிப்படையில் கூட்டம் நெரிசலை பொறுத்து அவ்வப்போது விவேகானந்தர் மண்டபத்துக்கு இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தற்போது மொத்தம் 5 படகுகள் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை கண்ணாடி பாலத்தை பார்வையிட செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு வசதிக்காக இயக்கப்பட்டு வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முன்பு சுற்றுலாப் பயணிகள் படகில் பயணம் செய்ய மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்து வந்தது. இப்போது சற்றே விரைவாக படகுகளில் செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது என்று சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர். பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் இணைந்து சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக மேற்கொண்ட இந்த ஏற்பாடு சுற்றுலா துறையில் ஒரு சிறப்பான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News