தமிழ்நாடு செய்திகள்

தமிழ்க்கடவுள் முருகனை பா.ஜ.க.விடம் இருந்து பாதுகாக்க வேண்டும்- செல்வப்பெருந்தகை

Published On 2025-06-23 14:44 IST   |   Update On 2025-06-23 14:44:00 IST
  • தமிழக பா.ஜ.க.விற்கு ஆதரவாக அந்த மாநாட்டை தேர்தல் பிரச்சார கூட்டமாக மாற்றி விட்டார்கள்.
  • மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அப்பட்டமான அரசியல் நோக்கம் கொண்டவையாக இருக்கிறது.

சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்து முன்னணி சார்பில் மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு எதிர்பார்த்தபடியே அரசியல் ஆதாயத்தை அடையும் நோக்கில் நடைபெற்றுள்ளது. நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குறுதியின்படி யாரும் அரசியல் பேச மாட்டோம் என்று சொன்னதை மீறுகின்ற வகையில் அதில் உரையாற்றிய ஆந்திர மாநில துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் உள்ளிட்ட தமிழக பா.ஜ.க. தலைவர்கள் முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையில் பகிரங்கமாக தமிழக பா.ஜ.க.விற்கு ஆதரவாக அந்த மாநாட்டை தேர்தல் பிரச்சார கூட்டமாக மாற்றி விட்டார்கள்.

அது மட்டுமல்லாமல், அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அப்பட்டமான அரசியல் நோக்கம் கொண்டவையாக இருக்கிறது.

இது அரசமைப்புச் சட்டத்தையும், நீதிமன்ற தீர்ப்பையும் அவமதிக்கும் செயலாகும். அரசியலையும், மதத்தையும் கலந்து தேசிய அளவில் அரசியல் ஆதாயம் தேடிய பா.ஜ.க., தமிழ்நாட்டில் கடவுள் பெயரை பயன்படுத்தி, தமிழகத்தில் உள்ள மக்களை பாசிச வலையில் சிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் இரையாக மாட்டார்கள்.

தமிழக கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று பெற்ற உரிமையை நிறைவேற்றுவதை தடுக்கிற வகையில் தமிழ்க் கடவுள் முருகனுக்கு புரியாத சமஸ்கிருத மொழியில் அர்ச்சனை செய்வதற்கு ஆதரவாக இருக்கிற ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வினர் தமிழ்க் கடவுள் முருகன் பெயரை உச்சரிப்பதற்கு கூட தகுதியற்றவர்கள்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை மதிக்காமல் அதற்கு தடையாக இருக்கும் இந்து மதத்தின் துரோகிகள். இவர்கள் இந்து மதத்தை சொந்தம் கொண்டாட என்ன உரிமை இருக்கிறது? இந்து மதத்தில் உள்ள அனைத்து சாதியினரையும் சமமாக கருதாதவர்களை இந்து சமய விரோதிகள் என்று கூறாமல் வேறு எப்படி அழைப்பது? இத்தகைய பாசிச மக்கள் விரோத பா.ஜ.க.விடமிருந்து இந்து மதத்தையும், தமிழ்க் கடவுள் முருகனையும் பாதுகாக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு இருப்பதை அனைவரும் உணர வேண்டும்.

இனிவருகிற காலங்களில் இத்தகைய முயற்சி நடைபெறுவதை முறியடிக்க சாதி, மத எல்லைகளைக் கடந்து அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News