குன்னூர் அருகே கொத்து கொத்தாக காய்த்து தொங்கும் நீலகிரி தவிட்டு பழங்கள்
- எங்களின் மூதாதையர் காலத்தில் இருந்து தவிட்டு பழங்கள் வனப்பகுதியில் காய்த்து வருகிறது.
- தவிட்டு பழத்தை சாப்பிட்டால் செரிமானம் அதிகரிப்பதுடன், ரத்தத்தை சுத்திகரித்து சோர்வை போக்கும்.
குன்னூர்:
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரி வனப்பகுதியில் நூற்றாண்டுகளுக்கும் மேலாக அரிய வகை தவிட்டு பழங்கள் விளைகின்றன. கோலிக்குண்டு வடிவில் காட்சி அளிக்கும் இந்த பழத்தில் துவர்ப்பு குறைவாகவும், இனிப்பு அதிகமாகவும் இருக்கும்.
வனப்பகுதிகளில் அதிகமாக காய்த்து தொங்கும் தவிட்டு பழங்களை பழங்குடி மக்கள் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கு கொடுத்து உபசரிப்பர். மேலும் அந்த பழங்களை நகர பகுதிக்கு கொண்டு சென்று ஒரு கிலோ ரூ.300 முதல் 500 வரை விற்பனை செய்து வருகின்றனர்.
மற்ற பகுதிகளில் இந்த பழம் கிடைக்காது என்பதால் உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி, சுற்றுலா பயணிகளும் இதனை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
தவிட்டு பழங்களின் சிறப்பம்சம் குறித்து பழங்குடி மக்கள் கூறியதாவது:-
எங்களின் மூதாதையர் காலத்தில் இருந்து தவிட்டு பழங்கள் வனப்பகுதியில் காய்த்து வருகிறது. இது கடந்த காலங்களில் குரங்குகளுக்கு மட்டுமின்றி பழங்குடி மக்களுக்கும் உணவாக இருந்தது. தவிட்டு பழத்தை சாப்பிட்டால் செரிமானம் அதிகரிப்பதுடன், ரத்தத்தை சுத்திகரித்து சோர்வை போக்கும்.
இதிகாச வனப்பருவத்தின் பசிதீர்த்த அமுத சொட்டு பழமே இந்த தவிட்டு பழம். இதற்கு புராண கதைகளும் உண்டு. 5 கணவர்களை தேடி கண்டுபிடித்து காட்டும் பழம் தான் 5 அல்லிராணிகள் எனவும் அழைக்கப்படுகிறது.
குன்னூர் அடுத்த யானை பள்ளம், சடையன் கோம்பை, பம்பள கோம்பை, சின்னாள கொம்பை, டால்பின்நோஸ், லேம்ஸ்ராக், பக்கா சூரன் மலை, தைமலை, கோட்டக்கல், சாம்பூர், பால்மரா உள்ளிட்ட பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் தவிட்டு பழங்கள் அதிக அளவில் உள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.