தமிழ்நாடு செய்திகள்

ரூ.199 கட்டணத்தில் ஒரு கோடி வீடுகளுக்கு அதிவேக இணையதள வசதி- தமிழகத்தில் அடுத்த மாதம் தொடக்கம்

Published On 2025-05-24 07:43 IST   |   Update On 2025-05-24 07:43:00 IST
  • வரும் ஆண்டுகளிலும், ஆண்டுக்கு ஒரு கோடி என்ற இலக்குடன் அனைத்து வீடுகளுக்கு இந்த இணையதள சேவை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
  • வணிக நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு ரூ.899 மற்றும் ரூ.1,199 என்ற இரு திட்டங்கள் செயல்பட உள்ளன.

சென்னை:

இன்றைய டிஜிட்டல் காலத்தில் இணையதளம் என்பது நம் வாழ்க்கையின் அவசியமாக மாறியுள்ளது. நகர்ப்புற மக்களுக்கு மிக அதிவேகத்தில் இணையதள வசதி கிடைக்கிறது. ஆனால் கிராமப்புறங்களில் அந்த வசதி கிடைப்பதில்லை. இந்த பாகுபாட்டை குறைத்து, அனைத்து மக்களுக்கும் அதிவேக இணைய சேவையை வழங்கும் நோக்கத்தில் மத்திய அரசு 'பாரத் நெட்' திட்டத்தின் கீழ் அனைத்து கிராமப்புறங்களுக்கும் அதிவேக இணையதள சேவை வழங்கும் திட்டத்தை நாடு முழுவதும் தொடங்கியது.

தமிழகத்தில் இந்த திட்டம், தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 525 கிராம பஞ்சாயத்துகளில் 'ஆப்டிகல் பைபர் கேபிள்கள் மூலம் அதிவேக இணைய தள சேவை வழங்க திட்டமிடப்பட்டது. அதற்கான பணிகள் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கி, தற்போது அது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

அதாவது, இந்த திட்டத்திற்காக தமிழகத்தில் சுமார் 55 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு கேபிள் பதிக்கப்பட்டு உள்ளன. மேலும் 11 ஆயிரத்து 800 கிராமங்களில் பணிகள் முழுவதும் முடிவடைந்து விட்டன. வனப்பகுதிகள் உள்ளிட்ட சில இடங்களில் அனுமதி பெற்று கேபிள் பதிப்பதில் தாமதம் ஏற்பட்டு உள்ளதால் அங்கு மட்டும் பணிகள் முழுமை பெறவில்லை. இருப்பினும் அடுத்த மாதத்திற்குள் அந்த பணிகளையும் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இதுவரை சுமார் 4 ஆயிரம் கிராமங்களில், இணையதள சேவை வழங்குவதற்கான நபர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்புகள் https://tanfinet. tn.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இன்னும் சில தினங்களில் மேலும் 4 ஆயிரம் கிராமங்களுக்கும், அதனைத்தொடர்ந்து மீதமுள்ள கிராமங்களுக்கும் அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன.

தற்போதைய நிலையில், ஏஜென்சிகள் நியமனம் முடிந்து விட்டால், அரசின் அனுமதி பெற்று உடனடியாக பொதுமக்களுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டு விடும். அடுத்த மாதத்தில் இணைப்புகள் வழங்கும் பணி தொடங்கி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



இந்த ஆண்டுக்குள் மட்டும் ஒரு கோடி வீடுகளுக்கு அதிவேகத்தில் இணையதள சேவை கொடுக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளிலும், ஆண்டுக்கு ஒரு கோடி என்ற இலக்குடன் அனைத்து வீடுகளுக்கு இந்த இணையதள சேவை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

மேலும் வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு ஏற்றபடி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. அதாவது வீடுகளுக்கு குறைந்தபட்சமாக ரூ.199 கட்டணத்தில், 20 எம்.பி.பி.எஸ் (Mpbs) வேகத்தில் அளவில்லா இணையதள சேவை வழங்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து ரூ.399 மற்றும் ரூ.499 திட்டமும் வழங்கப்பட உள்ளது. அதில் அதற்கேற்ற வகையில் வேகம் இருக்கும்.

அதேபோல் வணிக நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு ரூ.899 மற்றும் ரூ.1,199 என்ற இரு திட்டங்கள் செயல்பட உள்ளன. ஆனால் இவற்றில் மாற்றம் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.

Tags:    

Similar News