தமிழ்நாடு செய்திகள்

பொதுநல வழக்கை சிலரின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பயன்படுத்துவது அதிர்ச்சி அளிக்கிறது- நீதிபதிகள் அதிருப்தி

Published On 2025-12-02 12:53 IST   |   Update On 2025-12-02 12:53:00 IST
  • பொதுநல வழக்கு தொடர்ந்து, அதன் மூலம் பணம் பறிக்கும் நிலை உள்ளது.
  • வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

மதுரை:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த பூல்பாண்டி என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு காரைக்குடி நகராட்சியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, மதுரை ஐகோர்ட்டு கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் மனுவை திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், "பொதுநல வழக்கு தொடர்ந்து, அதன் மூலம் பணம் பறிக்கும் நிலை உள்ளது. அதுபோல பணம் கிடைத்தவுடன், பொதுநல வழக்கு திரும்பப் பெறப்படுகிறது. இது ஏற்கத்தக்கதல்ல. இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். 4 ஆண்டுகளாகியும் வழக்கு நிலுவையிலே வைக்கப்பட்டிருக்கிறது.

பொதுநல வழக்கை சிலரின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பயன்படுத்துவது அதிர்ச்சி அளிக்கிறது. அரசு அலுவலர்களும் இதில் நோட்டீஸ் கூட அனுப்பாமல் இருந்தது ஏற்கத்தக்கதல்ல. தற்போது தான் நோட்டீசே அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு பொதுநல வழக்கு என தொடர்ந்து ஆதாயம் பெற்றவுடன் திரும்ப பெரும் நடவடிக்கைகள் தடுக்கப்பட வேண்டும். ஆகவே பொதுநல வழக்கை முறையான காரணம் இன்றி திரும்ப பெற அனுமதி கோரினால் அதிக அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்து, மனுதாரர் 9-ந் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

Tags:    

Similar News