பெருஞ்சாணியில் முறிந்து விழுந்த வாழை மரம் - குசவன்குழி பகுதியில் வீட்டின் மீது சரிந்து விழுந்த செல்போன் டவர்.
குமரி முழுவதும் கொட்டி தீர்த்த கனமழை - கிராமங்கள் இருளில் மூழ்கியதால் பொதுமக்கள் அவதி
- மரக்கிளைகள் மின்கம்பங்கள் மீது முறிந்து விழுந்ததால் மின் வயர்கள் அறுந்து விழுந்தன.
- பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 35.84 அடியாக இருந்தது.
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் குமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த எச்சரிக்கையை தொடர்ந்து நேற்று காலையிலிருந்து மாவட்டம் முழுவதும் பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. இரவு சூறைக்காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது.
குழித்துறை, திக்குறிச்சி, சுருளோடு, கொட்டாரம், மயிலாடி, பூதப்பாண்டி, ஆணைக்கிடங்கு, முள்ளங்கினாவிளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. பெருஞ்சாணியில் அதிகபட்சமாக 38.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. சூறைக்காற்றுடன் மழை பெய்ததையடுத்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. திருவட்டார், கொட்டாரம், மயிலாடி, நாகர்கோவில் பகுதிகளில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் மின்சாரம் தடைப்பட்டது.
மரக்கிளைகள் மின்கம்பங்கள் மீது முறிந்து விழுந்ததால் மின் வயர்கள் அறுந்து விழுந்தன. இதனால் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்கள் நேற்று இரவு இருளில் மூழ்கியது. இதனால் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள்.
இன்று காலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆறுகாணி, பத்துகாணி, திருவட்டாறு, திக்குறிச்சி, குழித்துறை மற்றும் மலையோர கிராமங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களிலும் சூறைக்காற்று வீசியது. விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது.
திற்பரப்பு அருவி பகுதியிலும் சாரல் மழை நீடித்து வருகிறது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வரும் நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். தொடர் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர் வரத்தும் அதிகரித்துள்ளது.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 35.84 அடியாக இருந்தது. அணைக்கு 671 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 37.35 அடியாக உள்ளது. அணைக்கு 371 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 22 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை 36.4, பெருஞ்சாணி 38.6, சிற்றாறு 1-35.4, சிற்றார் 2-18, கொட்டாரம் 17.2, மயிலாடி 6.2, நாகர்கோவில் 19, கன்னிமார் 30.2, பூதப்பாண்டி 22.6, முக்கடல் 12, பாலமோர் 29.4, தக்கலை 17, குளச்சல் 18.2, இரணியல் 10.4, அடையாமடை 17, குந்தன்கோடு 24.6, கோழிப்போர்விளை 30.8, மாம்பழத்துறையாறு 24, ஆணைக்கிடங்கு 25.4, களியல் 22.4, குழித்துறை 32.4, புத்தன் அணை 37.2, சுருளோடு 27.2, திற்பரப்பு 32.8, முள்ளங்கினாவிளை 18.4.
மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ரப்பர் பால் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. கீரிப்பாறை, தடிக்காரன்கோணம், குலசேகரம் பகுதிகளில் உள்ள ரப்பர் தோட்டங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. ரப்பர் மரங்களில் கட்டப்பட்டுள்ள சிரட்டைகளிலும் மழைநீர் தேங்கி உள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.
தோவாளை, செண்பகராமன்புதூர் பகுதிகளில் செங்கல் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் குளங்களில் இருந்து வண்டல் மண் எடுக்கும் பணியை விவசாயிகள் மேற்கொண்டு இருந்தனர். தற்போது பெய்த மழையின் காரணமாக வண்டல் மண் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மழையின் காரணமாக விவசாயிகள் சாகுபடி பணியை தீவிரம் காட்டி உள்ளனர். கன்னி பூ சாகுபடிக்காக வருகிற 1-ந்தேதி அணைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.