தமிழ்நாடு செய்திகள்

திருவள்ளூர், ராணிப்பேட்டைக்கு அதி கனமழை எச்சரிக்கை

Published On 2025-10-22 14:57 IST   |   Update On 2025-10-22 14:57:00 IST
  • 9 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
  • மீனவர்கள் இன்றும், நாளையும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

சென்னை:

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.

இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அடுத்த 3 மணி நேரத்துக்குள் அதாவது காலை 8.30 மணிக்கு அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. இதன் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.

காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடலோர பகுதியை நெருங்கி நீடித்தது.

இதற்கிடையே காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று இரவு மேலும் சற்று வலுவடைந்தது. இன்று (புதன்கிழமை) மாலைக்குள் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதாவது புயல் சின்னமாக வலுவடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

இதன் காரணமாக வட மாவட்டங்களில் இன்றும், நாளையும் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

புயல் சின்னம் இன்று (புதன்கிழமை) வலுவான நிலையில் நீடிப்பதால் திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இந்த 2 மாவட்டங்களிலும் இன்று 20 சென்டி மீட்டருக்கு மேல் அதி கனமழை பெய்யும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது. இதையடுத்து இந்த மாவட்டங்களில் மழை பாதிப்பு ஏற்பட்டால் மக்களுக்கு உதவ அதிகாரிகள் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர்.

இதே போன்று சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய 9 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

கோவை, ஈரோடு, நீலகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 12 மாவட்டங்களுக்கும் புதுச்சேரிக்கும் இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

புயல் சின்னம் தமிழக கடலோர பகுதியை நெருங்கி வருவதால் கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மீனவர்கள் இன்றும், நாளையும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

புயல் சின்னம் இன்று மாலை மேலும் வலுவடையும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால் அது புயலாக மாறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த புயல் சின்னம் புயலாக மாற வாய்ப்பு இல்லை என்றும் வானிலை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே அது கரையை கடக்கும் என்று தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News