தமிழ்நாடு செய்திகள்

குமரி மாவட்டத்திற்கு 4 நாட்கள் கனமழை எச்சரிக்கை

Published On 2025-06-12 12:52 IST   |   Update On 2025-06-12 12:52:00 IST
  • மழையின் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
  • பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 60.45 அடியாக உள்ளது.

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு மாவட்டம் முழுவதும் மழை நீடித்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கனமழை கொட்டி தீர்த்தது.

பெருஞ்சாணியில் அதிகபட்சமாக 20.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மழையின் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

தக்கலை, குளச்சல், களியல், சுருளோடு, முள்ளங்கினாவிளை, கன்னிமார் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது. அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது.

பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 43.22 அடியாக இருந்தது. அணைக்கு 279 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 699 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 60.45 அடியாக உள்ளது. அணைக்கு 279 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றார் 1 அணை நீர்மட்டம் 9.77 அடியாகவும், சிற்றார் 2 அணை நீர்மட்டம் 9.87 அடியாகவும் உள்ளது. பொய்கை அணையின் நீர்மட்டம் 15.40 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 38.06 அடியாகவும், முக்கடல் அணை நீர்மட்டம் 2.5 அடியாகவும் உள்ளது.

மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதுடன் பாசனத்திற்காக அணை திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். சுசீந்திரம், தேரூர் பகுதிகளில் ஏற்கனவே வயல்களில் நடவு பணி நிறைவு பெற்ற நிலையில் உரமிடுதல் பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

அணைகளில் திறக்கப்பட்டுள்ள தண்ணீரால் சானல்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பாசன குளங்கள் வேகமாக நிரம்ப தொடங்கியுள்ளன.

மாவட்டம் முழுவதும் மழை பெய்து வரும் நிலையில் கன்னியாகுமரி உட்பட 8 மாவட்டங்களில் நாளை முதல் வருகிற 16-ந்தேதி வரை கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

Tags:    

Similar News