உடுமலை வனப்பகுதியில் கனமழை: பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம்
- அருவியின் நீர்வரத்தை கோவில் பணியாளர்கள் மற்றும் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- பஞ்சலிங்க அருவிக்கு செல்ல இன்று 2-வது நாளாக பக்தர்கள், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்திமலை உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இங்கு பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. அங்கிருந்து சுமார் 750 மீட்டர் உயரத்தில் பஞ்சலிங்க அருவி இருக்கிறது.
ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில், குளித்து மகிழ தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதேபோல் அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கும் தினமும் திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்தநிலையில் நேற்று அருவியின் நீர்பிடிப்பு பகுதியில் திடீரென கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
தடுப்புகளை தாண்டி கொட்டிய தண்ணீரானது, அடிவார பகுதியில் மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலையும் சூழ்ந்தது. அந்த தண்ணீர் திருமூர்த்தி அணையை அடைந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. 60 அடி உயரம் கொண்ட அந்த அணையில், இன்று காலை நிலவரப்படி 52 அடி தண்ணீர் உள்ளது.
அருவியின் நீர்வரத்தை கோவில் பணியாளர்கள் மற்றும் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். வெள்ளப்பெருக்கு காரணமாக அமணலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் பஞ்சலிங்க அருவிக்கு செல்ல இன்று 2-வது நாளாக பக்தர்கள், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.