தமிழ்நாடு செய்திகள்

டெல்டா மாவட்டங்களில் கனமழை- ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின

Published On 2025-10-22 11:29 IST   |   Update On 2025-10-22 11:29:00 IST
  • கனமழை காரணமாக குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது.
  • தொடர் மழையால் பல்வேறு பகுதிகளில் 40 நாட்களே ஆன இளம் சம்பா இளம் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன.

திருவாரூர்:

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது.

திருவாரூர் நகரத்துக்குட்பட்ட அழகிரி காலனி பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் கனமழை காரணமாக குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. மேலும் இங்குள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்துள்ளனர். மேலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் வீட்டுக்குள் புகுந்த மழைநீருடன் கழிவு நீரும் கலந்து வந்துள்ளது. இந்த தண்ணீரை பொதுமக்கள் வாளிகளை கொண்டு அகற்றி வருகின்றனர்.

மேலும் மழைநீர் புகுந்ததால் வீடுகளில் இருந்த மின்சாதன பொருட்கள் உள்பட அனைத்து பொருட்களும் பழுதாகி விட்டன. இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், பருவமழை காலங்களில் இது போல் பலமுறை மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. நாங்கள் அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் இந்த முறையும் தண்ணீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இனியாவது அதிகாரிகள் வீடுகளுக்குள் மழைநீர் புகாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மழை நீரை வடிய வைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் தொடர் மழையால் நன்னிலம், பூந்தோட்டம், முடிகொண்டான், கொல்லுமாங்குடி, குடவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 40 நாட்களே ஆன இளம் சம்பா இளம் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன.

 

ஒரு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் செலவிட்டு சாகுபடி செய்துள்ள நிலையில் வயலில் மழைநீர் தேங்கியதால் பயிர்கள் அழுக தொடங்கி விட்டன. இந்த ஆண்டு சம்பா சாகுபடி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

எனவே உடனடியாக வேளாண்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட விவசாய நிலத்திற்கு நேரடியாக சென்று மழை நீரை வடிய வைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும், மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புதுத்துறை கன்னி கோவில் தெருவை சேர்ந்த தாமஸ் என்பவரது தொகுப்பு வீடு தொடர் மழை காரணமாக நேற்று இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்த தாமஸ்சின் மகள் சுவேதா (வயது 15), மகன் சந்தோஷ்குமார் (19) ஆகிய இருவரும் காயம் அடை ந்தனர். இதில் சுவேதாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டதால், அவர் சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே விழுதியூர் ஊராட்சி ஆதிதிராவிடர் தெருவில் சுமார் 70 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் கனமழை காரணமாக குடியிருப்புகளை சுற்றி மழைநீர் வடியாமல் குளம் போல் தேங்கி கிடக்கிறது. கழிவுநீரும் கலந்துள்ளதால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் இருப்பதாகவும், விஷ பூச்சிகள், பாம்புகள் வீடுகளுக்குள் புகுந்து விடுவதாகவும் இப்பகுதி மக்கள் அச்சத்துடன் தெரிவித்தனர்.

மேலும் பால், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாமல் வீடுகளுக்குள் முடங்கி கிடப்பதாக வேதனையுடன் கூறினர். மேலும் மழையினால் இங்கு 2 குடிசை வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழைநீர் வடிய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல் தஞ்சை மாவட்டம் பூதலூர் பகுதியில் 13 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. தற்போது இந்த குறுவை நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்தன. ஆனால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும் வயலில் பயிர்கள் சாய்ந்து விட்டதால் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் கடன் வாங்கி பயிர் செய்த நெல் அறுவடை செய்ய முடியாமல் போனதால் கண்ணீரில் தவிக்கின்றனர். எனவே தமிழக அரசு ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

Tags:    

Similar News