தமிழ்நாடு செய்திகள்

கம்பத்தில் கனமழைக்கு 5 வீடுகள் இடிந்து தரைமட்டம்

Published On 2025-04-05 14:05 IST   |   Update On 2025-04-05 14:05:00 IST
  • கம்பம் சுற்று வட்டார பகுதியிலும் சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக இடைவிடாத மழை கொட்டி தீர்த்தது.
  • வீடுகள் இடிந்த குடும்பத்தினரை பாதுகாப்பாக வேறு இடத்தில் தங்க வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கம்பம்:

தேனி மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக கனமழை பெய்தது. இதேபோல கம்பம் சுற்று வட்டார பகுதியிலும் சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக இடைவிடாத மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் புகுந்து பெருக்கெடுத்து ஓடியது. கம்பம் நகராட்சி 26, 27, 28வது வார்டுகளில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் 29வது வார்டு ஆதிசக்தி விநாயகர் கோவில் தெருவுக்குள் சூழ்ந்தது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவிர்த்தனர். மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டதால் இரவு முழுவதும் தூக்கமின்றி வேறு இடங்களுக்கு சென்றனர்.

இன்று அதிகாலை அப்பகுதியில் இருந்த அடுத்தடுத்த 5 வீடுகள் இடிந்து தரைமட்டமானது. அப்போது வீட்டிற்குள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து வீட்டில் இருந்த பொருட்களை அவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து சுவர் இடிந்து விழுந்ததால் ரேசன் கார்டு, ஆதார் அட்டை, வங்கி புத்தகம் மற்றும் பள்ளி மாணவர்களின் புத்தகங்கள் அனைத்தும் நீரில் நனைந்து சேதம் ஆகிவிட்டதாக வேதனையுடன் அவர்கள் தெரிவித்தனர்.

எனவே தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு கம்பம் நகராட்சி அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறையினர் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வீடுகள் இடிந்த குடும்பத்தினரை பாதுகாப்பாக வேறு இடத்தில் தங்க வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

Tags:    

Similar News