ராமேசுவரத்தில் குவிந்த பக்தர்கள்- அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி சாமி தரிசனம்
- விடுமுறை தினத்தை முன்னிட்டு இன்று தனுஷ்கோடியிலும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அதிகளவில் திரண்டனர்.
- ஆர்ப்பரிக்கும் கடலை ரசித்த சுற்றுலா பயணிகளை கண்காணித்த பாதுகாப்பு போலீசார் கடலில் இறங்க கூடாது என எச்சரித்தனர்.
ராமேசுவரம்:
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில் இந்துக்களின் முக்கிய ஆன்மீக ஸ்தலமாக விளங்கி வருகிறது. இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி திதி கொடுத்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனால் நாடு முழுவதும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
விடுமுறையை முன்னிட்டு நேற்று முதல் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து கார், பஸ், வேன் மற்றும் ரெயில்கள் மூலம் ஆயிரக்கணக்கானோர் குடும்பம் குடும்பமாக ராமேசுவரம் வந்தனர். இன்று அதிகாலை அவர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி திதி கொடுத்தனர்.
தொடர்ந்து ராமநாத சுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் புனித நீராடிய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசுவாமி-பர்வதவர்தினி அம்பாளை தரிசனம் செய்தனர். விடுமுறை தினத்தை முன்னிட்டு இன்று தனுஷ்கோடியிலும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அதிகளவில் திரண்டனர். ஆர்ப்பரிக்கும் கடலை ரசித்த சுற்றுலா பயணிகளை கண்காணித்த பாதுகாப்பு போலீசார் கடலில் இறங்க கூடாது என எச்சரித்தனர்.
இதே போல் பேக்கரும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவு மண்டபத்தையும் ஏராளமானோர் பார்வையிட்டனர்.