கொடுமுடி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் திடீர் ஆய்வு
- மருந்து, ஊசிகள் இருப்பு, நோயாளிகளின் வருகை, எக்ஸ்-ரே பிரிவு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
- உள்நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் உணவு வழங்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் அறிவுறுத்தினார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கரூரில் நடைபெற்ற தி.மு.க முப்பெரும் விழாவில் கலந்துகொண்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், இன்று காலை ஈரோடு மாவட்டம் கொடுமுடிக்கு வந்திருந்தார். பின்னர் கொடுமுடி பகுதியில் சிறிது நேரம் நடைபயிற்சி மேற்கொண்டார்.
அதைத்தொடர்ந்து அவர் திடீரென கொடுமுடி அரசு மருத்துவமனைக்குள் சென்று, அங்கிருந்த மருத்துவர்கள், பணியாளர்கள் வருகைப்பதிவேடு, மருந்து, ஊசிகள் இருப்பு, நோயாளிகளின் வருகை, எக்ஸ்-ரே பிரிவு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், அங்கு உள்நோயாளிகளாக இருந்தவர்களிடம், முறையாக சிகிச்சை அளிக்கின்றார்களா, மருந்து, ஊசிகள் வழங்கப்படுகிறதா என சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார்.
மேலும், அங்குள்ள சுகாதார வளாகங்கள் மற்றும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும், இங்கு ஏதேனும் குறைகள் இருந்தால், உடனுக்குடன் சரி செய்ய வேண்டும் என மருத்துவர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
இதனையடுத்து, உள்நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் உணவு வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியம் அறிவுறுத்தினார். ஆய்வை முடித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்.