தமிழ்நாடு செய்திகள்

ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்துக்கு ஏன் போலீஸ் பாதுகாப்பு வழங்கவில்லை? மதுரை மாவட்ட கோர்ட் கேள்வி

Published On 2025-05-05 13:42 IST   |   Update On 2025-05-05 13:42:00 IST
  • கிரானைட் முறைகேடு வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்துக்கும் சமீபத்தில் மதுரை மாவட்ட கோர்ட்டு சம்மன் அனுப்பி இருந்தது.
  • தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், 2023-ம் ஆண்டு வரை தனக்கு போலீஸ் பாதுகாப்பு இருந்தது.

மதுரை:

மதுரை மாவட்டத்தில் கிரானைட் முறைகேடு சம்பந்தமாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளின் விசாரணை, மதுரை மாவட்ட கனிமவள முறைகேடு வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டு மற்றும் மேலூர் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ளன.

இந்த வழக்குகளில் பல்வேறு முக்கிய பிரமுகர்களும் சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்குகள் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கிரானைட் முறைகேடு சம்பந்தமாக விசாரணை அதிகாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் நியமிக்கப்பட்டார். இது தொடர்பாக அவர் விசாரணை நடத்தி, அறிக்கையையும் அரசிடம் தாக்கல் செய்திருந்தார்.

கிரானைட் முறைகேடு வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்துக்கும் சமீபத்தில் மதுரை மாவட்ட கோர்ட்டு சம்மன் அனுப்பி இருந்தது. இந்த நிலையில் தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், 2023-ம் ஆண்டு வரை தனக்கு போலீஸ் பாதுகாப்பு இருந்தது. அதன் பின்பு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. இதனால் வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் நேரில் ஆஜராவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.

எனவே கோர்ட்டில் ஆஜராகும் போது போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் அல்லது வழக்கு விசாரணைக்கு வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆஜராக அனுமதிக்க வேண்டும். இவ்வாறு ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் அரசு வக்கீல் மூலமாக மதுரை மாவட்ட கோர்ட்டுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பந்தப்பட்ட வழக்கு மதுரை மாவட்ட கோர்ட்டில் தலைமை நீதிபதி லோகேஸ்வரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஐ.ஏ.எஸ். அதி காரி சகாயம் கோர்ட்டில் ஆஜராகவில்லை.

இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்துக்கு ஏன் போலீஸ் பாதுகாப்பு வழங்கவில்லை என கேள்வி எழுப்பினார். பின்னர் நீதிபதி, அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுமா? இல்லை என்றால் மத்திய பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு வழங்க உத்தரவிட நேரிடும் என நீதிபதி தெரிவித்து, இந்த வழக்கு விசாரணையை இன்று பிற்பகலுக்கு ஒத்திவைத்தார்.

Tags:    

Similar News