தமிழ்நாடு செய்திகள்

தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கோரி திருமாவளவன் மேல்முறையீட்டு மனு - ஜூன் மாதம் ஒத்திவைத்தது மதுரை ஐகோர்ட்

Published On 2025-04-30 13:56 IST   |   Update On 2025-04-30 14:09:00 IST
  • கட்சியின் கொடிக்கம்பத்தை அகற்றக்கோரி நெடுஞ்சாலை துறை பொறியாளர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
  • இந்த நடவடிக்கை அரசியல் அமைப்பு சட்டம் கொடுத்துள்ள உரிமைகளுக்கு எதிராக உள்ளது.

மதுரை:

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் கூறியிருந்ததாவது:-

விடுதலை சிறுத்தைகள் கட்சி என்ற பெயரில் தமிழகத்தில் பதிவு பெற்ற அரசியல் கட்சியாக செயல்பட்டு வருகிறோம். எங்களுக்கு 4 சட்டமன்ற உறுப்பினர்களும், 2 பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். தமிழகத்தின் முக்கிய கட்சிகளில் ஒன்றாக விடுதலை சிறுத்தைகள் கட்சி செயல்பட்டு வருகிறது.

பட்டியலின, மற்றும் சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தமிழகத்தின் முன்னேற்றத்திற்காகவும் நாங்கள் செயல்பட்டு வருகின்றோம். இந்நிலையில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள எங்களது கட்சியின் கொடிக்கம்பத்தை அகற்றக்கோரி நெடுஞ்சாலை துறை பொறியாளர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

அதில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் நீதிமன்றம் விசாரணை செய்து தமிழகத்தில் நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலை, ஊரக மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு சொந்தமான இடங்களில் அரசியல் கட்சி, சாதிய இயக்கங்கள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் கொடி மரங்கள், கல்வெட்டு தூண்கள் அகற்ற உத்தரவிட்டதன் அடிப்படையில் எங்களது கட்சி கொடி மரங்களை அகற்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை அரசியல் அமைப்பு சட்டம் கொடுத்துள்ள உரிமைகளுக்கு எதிராக உள்ளது. எனவே அரசியல் கட்சி கொடி மரங்களை அகற்ற உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து புதிய உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் நீதிபதி ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது. விசாரணை செய்த நீதிபதிகள் இந்த வழக்கை விரிவான விசாரணைக்காக ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தனர்.

Tags:    

Similar News