தமிழ்நாடு செய்திகள்

டி.இ.டி. தகுதி தேர்வு சிறுபான்மை நிறுவனங்கள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும்- ஐகோர்ட்

Published On 2025-04-05 14:14 IST   |   Update On 2025-04-05 14:14:00 IST
  • தகுதிகளை நிர்ணயம் செய்ய என்.சி.டி.இ. கல்வி ஆணையமாக அரசாங்கம் நியமித்து உள்ளது.
  • தற்போதைய வழக்கில், விண்ணப்பதாரர் டி.இ.டி. தகுதி இல்லாததால், நியமனத்திற்கான ஒப்புதலை வழங்க முடியாது.

மதுரை:

மதுரை மேலூர் அருகே உள்ள ஒரு சிறுபான்மையினர் அரசு உதவி பெறும் பள்ளியில், பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில், டி.இ.டி. எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்ற முதன்மை கல்வி அலுவலரின் உத்தரவை ரத்து செய்து தனக்கு பட்டதாரி ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என ஆசிரியர் பஷீர் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, டி.இ.டி.யில் தேர்ச்சி பெறாத சிறுபான்மை பள்ளி ஆசிரியரான பஷீருக்கு பணி வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து, கல்வித்துறை சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், சிறுபான்மை நிறுவனங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியை நிர்ணயிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது.

தகுதிகளை நிர்ணயம் செய்ய என்.சி.டி.இ. கல்வி ஆணையமாக அரசாங்கம் நியமித்து உள்ளது. மற்றும் என்.சி.டி.இ., டி.இ.டி., ஐ தகுதிகளில் ஒன்றாக நிர்ணயித்துள்ளது.

எனவே, டி.இ.டி. தகுதி சிறுபான்மை நிறுவனங்கள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

தற்போதைய வழக்கில், விண்ணப்பதாரர் டி.இ.டி. தகுதி இல்லாததால், நியமனத்திற்கான ஒப்புதலை வழங்க முடியாது. அனுமதி மறுத்து கல்வித்துறை பிறப்பித்த உத்தரவு டி.இ.டி. தகுதியைப் பொருத்தவரை செல்லுபடியாகும். எனவே, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு உத்தரவிட்டு உள்ளனர்.

Tags:    

Similar News