தமிழ்நாடு செய்திகள்

சாட்சி சொல்ல வந்தவரை கொன்ற முதல் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை உறுதி- மதுரை ஐகோர்ட் உத்தரவு

Published On 2025-11-28 12:29 IST   |   Update On 2025-11-28 12:29:00 IST
  • தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் செல்வராஜ் உள்ளிட்ட ஐந்து நபர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர்.
  • இரண்டு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர்.

மதுரை:

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வட்டத்துக்கு உட்பட்ட பாளையஞ்செட்டிகுளத்தில் தேர்தல் முன்விரோதத்தால் 2016-ல் பெருமாள் என்பவரை, அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் தரப்பினர் கொலை செய்ய முயன்றனர். இது தொடர்பான வழக்கு விசாரணை நெல்லை நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த வழக்கில், அதே ஊரைச் சேர்ந்த ராமசுப்பு மகன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் வைகுண்டம் என்பவர், செல்வராஜ் தரப்பினருக்கு எதிராக சாட்சியளித்தார். இதனால், வைகுண்டம் மீது செல்வராஜ் தரப்பினர் ஆத்திரமடைந்தனர். நீதிமன்றத்தில் தங்களுக்கு எதிராக சாட்சி சொல்லக்கூடாது என தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர். இருந்தபோதிலும் வைகுண்டம் செல்வராஜ் தரப்பிற்கு எதிராக சாட்சி அளித்துள்ளார்.

2022 மார்ச் 10-ந்தேதி பாளையஞ்செட்டிகுளத்தில் உள்ள கால்வாயில் வைகுண்டம் குளித்துக் கொண்டிருந்தார். அங்கு சென்ற செல்வராஜ் (43), அந்தோணி ராஜ் (எ) பிரபாகரன் (46), தேவதாஸ் என்பவரின் மகன்களான அருள் பிலிப் (31), அன்டோ நல்லையா (28), திரவியம் என்பவரின் மகன் பாபு அலெக்சாண்டர் (41), கோவில்பிச்சை என்பவரின் மகன் ராஜன் (70), ராஜன் மனைவியான லீலா (60), தேவதாஸ் மனைவி ஜாக்குலின் (59) ஆகிய 8 பேரும், வைகுண்டத்துடன் தகராறில் ஈடுபட்டனர். தகராறு முற்றியதில் வைகுண்டம் கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து, செல்வராஜ் உள்ளிட்ட 8 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நெல்லை இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், குற்றம் சுமத்தப்பட்ட செல்வராஜூக்கு தூக்கு தண்டனையும், அந்தோணி ராஜ், அருள் பிலிப், அன்டோ நல்லையா, பாபு அலெக்ஸாண்டர் ஆகிய 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், ராஜன், செல்வலீலா, ஜாக்குலீன் ஆகிய மூவருக்கும் 2 மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இந்தநிலையில் தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் செல்வராஜ் உள்ளிட்ட ஐந்து நபர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் வேல்முருகன் நீதிபதி விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணை நடைபெற்றது.

விசாரணையின் போது அரசு தரப்பில் தமிழ்நாடு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார் ஆஜராகி, நீதிமன்றத்தின் விசாரணையின் போது எதிரிகள் குற்றம் செய்ததற்கான அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டு குற்றம் குற்றம் உறுதி செய்யப்பட்டதன் அடிப்படையில் செல்வராஜூக்கு தூக்கு தண்டனை மற்றும் மற்ற எதிரிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.

எனவே குற்றவாளிகளின் தண்டனையை ரத்து செய்யக்கூடாது என வாதிட்டனர். இரண்டு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், கீழமை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதி செய்து மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்தனர்.

இதனால் செல்வராஜூக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. மேலும் ஆண்டனி ராஜ் உள்ளிட்டோருக்கு வழங்கிய ஆயுள் தண்டனையும் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News