கவின் கொலை வழக்கில் 8 வாரங்களில் விசாரித்து சி.பி.சி.ஐ.டி. அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்- ஐகோர்ட்
- விசாரணை முறையாக நடைபெறுவதால், மேற்கொண்டு எவ்வித உத்தரவையும் பிறப்பிக்க அவசியமில்லை.
- தவறு செய்தவர்கள் தப்பிக்க கூடாது.
மதுரை:
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையைச் சேர்ந்த பொன் காந்திமதி நாதன் மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நெல்லையில் கடந்த ஜூலை 27-ந்தேதி கவின் எனும் இளைஞர் ஆணவ படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கை விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கவினை படுகொலை செய்த சுர்ஜித் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது தந்தையும் ஜூலை 30-ந்தேதி கைது செய்யப்பட்டிருக்கிறார்.
ஆனால் சுர்ஜித்தின் தாயார் இதுவரை கைது செய்யப்படவில்லை. அதோடு கொலை செய்யப்பட்ட கவினை ஏற்கனவே காவல் ஆய்வாளர் காசி பாண்டியன் மிரட்டியதாக கவினின் தந்தை புகார் அளித்துள்ளார். இருப்பினும் அவர் வழக்கில் சேர்க்கப்படவில்லை. வழக்கை விசாரிக்கும் காவல் கண்காணிப்பாளரும் சுர்ஜித்தின் சமூகத்தை சேர்ந்தவர் ஆவார்.
ஆகவே நெல்லை மாவட்ட நீதிபதி கண்காணிப்பின் கீழ் சி.பி.சி.ஐ.டி. வழக்கை விசாரிக்கவும், கவினின் குடும்பத்திற்கு 50 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்கவும், ஆணவ படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டத்தை இயற்ற உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அஜ்மல்கான் ஆஜராகி, ஜூலை 25-ந்தேதி 2.30 மணிக்கு கவின் படுகொலை செய்யப்பட்ட நிலையில், மாலை 5 மணிக்கு புகார் அளிக்கப்பட்டு, இரவு 7.30 மணிக்கு சுர்ஜித் கைது செய்யப்பட்டார். வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், இதுவரை 3 செல்போன்கள், 7 சி.சி.டி.வி. காட்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
எஸ்.சி. எஸ்.டி பிரிவின் கீழ் முன்பு ரூ.8.2 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. 6 லட்ச ரூபாய் கவினின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. விசாரணை முறையாக சென்று கொண்டுள்ளது என தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், இறுதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய எவ்வளவு காலம் தேவைப்படும்? என கேள்வி எழுப்பினர். அதற்கு சி.பி.சி.ஐ.டி. தரப்பில், 2 மாத கால அவகாசம் கோரப்பட்டது.
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பினைய் காஸ், சுர்ஜித்தின் தாயார் இதுவரை கைது செய்யப்படவில்லை. பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் காசி பாண்டியன் ஏற்கனவே சாதி ரீதியாக செயல்படுவதாக புகார் எழுந்ததால், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவர் மீது புகார் வைக்கப்பட்ட அன்றே அவருக்கு ஆதரவாக தகவல் வெளியாகி உள்ளது. கொலை செய்யப்பட்ட இடத்தில் மாவட்ட கலெக்டரும், ஆணையரும் ஆய்வு செய்யவில்லை. ஆகவே மாவட்ட நீதிபதி விசாரணையை கண்காணிக்க உத்தரவிட வேண்டும். ஆணவப்படுகொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், இதில் அரசு சார்பில் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விசாரணை முறையாக நடைபெறுவதால், மேற்கொண்டு எவ்வித உத்தரவையும் பிறப்பிக்க அவசியமில்லை. சி.பி.சி.ஐ.டி.யின் விசாரணை குறித்து எந்த புகாரும் இல்லை என்பதால், மனுதாரர் தன்னிடம் உள்ள விபரங்களை சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கலாம். தவறு செய்தவர்கள் தப்பிக்க கூடாது. ஆகவே சி.பி.சி. ஐ.டி., விசாரணை நடத்தி இறுதி அறிக்கையை 8 வாரத்திற்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 2 மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.